தமிழகத்தில் உள்ள 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி குறித்து சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’தமிழகத்தில் உள்ள 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது. இவற்றை நடத்த முதுகலை தமிழாசிரியரை நியமிக்க வேண்டும். அவருடன், தலைமை ஆசிரியர்கலந்து ஆலோசித்து, நிகழ்ச்சிகளை முடிவு செய்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 19.04.2022-ஆம் நாளன்று நடைபெற்ற 2022-2023 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கையின்போது தொழில்துறை அமைச்சர் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டார்:
"அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும் ஏற்படுத்திடும் வகையிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6218 அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றம் மேம்படுத்தப்படும். அதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க் கூடல் நடத்த ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 9000/- வீதம் நிதியுதவி வழங்கப்படும். இதற்கெனத் தொடர் செலவினமாக ரூபாய் 5.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது."
5.59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 6218 அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ்க் கூடல் நடத்திட அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கான செலவினங்களை மேற்கொள்ள தொடர் செலவின வகைப்பாட்டில் ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- (ரூபாய் ஒன்பதாயிரம் மட்டும்) வீதம் பள்ளிக் கல்வி இயக்குநர் வாயிலாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலருக்கு வழங்கி அவ்வலுவலகம் வாயிலாக தற்போதுள்ள 6218 அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.5,59,62,000/-க்கு (ரூபாய் ஐந்து கோடியே ஐம்பத்தொன்பது இலட்சத்து அறுபத்து இரண்டாயிரம் மட்டும்) கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
* தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்த ஒவ்வொரு பள்ளியிலும் பணியாற்றும் முதுநிலை தமிழாசிரியர் ஒருவரை அப்பள்ளியின் தலைமையாசிரியர் நியமிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் தொடர்பாக அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரும் முதுநிலை தமிழாசிரியரும் கலந்து ஆலோசித்து முடிவுசெய்து கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க்கூடல் நடத்தப்பெறுவதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
* ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டமைக்கான செலவின விவரங்களையும், பயனீட்டுச் சான்றிதழையும் இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்.
* எக்காரணத்தைக் கொண்டும் அத்தொகையினை பிற இனங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அறிவொளி தெரிவித்துள்ளார்.