தமிழ்நாட்டையும் சேர்த்து இந்தியாவில் மொத்தம் 11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் கற்பிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வினாவுக்கு மத்திய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு, மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 55,356 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 666 பள்ளிகளிலும், கேரளத்தில் 254 பள்ளிகளிலும், கர்நாடகத்தில் 132 பள்ளிகளிலும், ஆந்திரத்தில் 108 பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.
மராட்டியத்தில் 49, அந்தமான் நிகோபர் தீவுகளில் 21, தெலுங்கானாவில் 12, தில்லியில் 11, குஜராத் மற்றும் சண்டிகரில் தலா 1 பள்ளியிலும் தமிழ் மொழி கற்றுத் தரப்படுகிறது.
இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. அதே நேரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கி செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்த மத்திய அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி, அந்த அமைப்புக்குக் கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்களையும் வெளியிட்டார்.
ஆண்டு | ஒதுக்கப்பட்ட நிதி (ரூபாயில்) | வழங்கப்பட்ட நிதி (ரூபாயில்) |
2017-18 | 10,67,62,739 | 10,27,62,739 |
2018-19 | 4,65,25,000 |
5,46,65,205 |
2019-20 | 9,80,78,393 | 9,83,54,528 |
2020-21 |
11,73,00,000 | 11,87,11,623 |
2021-22 | 11,86,15,000 | 11,83,07,237 |
இதுதவிர்த்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மாநிலப் பல்கலைக்கழகங்களான தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் செம்மொழியை ஊக்குவிக்கத் தலா ரூ.1 கோடியை அளித்துள்ளது என்றும் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்