இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளதாவது:
19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கே வருகை புரியும் மாணவர்களின் பெயர்பட்டியலுடன் கூடிய வருகைத் தாள் தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஒவ்வாரு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தவறாமல் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைதாள் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும்.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு:
மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான User ID /Password கொண்டு பதிவிறக்கம் செய்துகொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து வழங்கவும், தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்கு தெரிவிக்கவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
அது என்ன தமிழ் திறனறிவுத் தேர்வு?
பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில் தயாராகி, பங்கு பெற்று வருகின்றனர். அதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசு தெரிவித்தது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு முதல் தேர்வு
இதைத் தொடர்ந்து முதன்முதலாக 2022- 2023ஆம் கல்வியாண்டில் அக்டோபர் 15ஆம் தேதி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டது. 2.67 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், அதில் இருந்து 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது.