அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களும் இனி உயர் கல்விக்கு மாதாமாதம் 1000 ரூபாய் பெறும் வகையில், தமிழ்ப் புதல்வன் (Tamil Pudhalvan) திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:


‘’தமிழ்நாட்டில் ரூபாய் 5 ஆயிரம் கோடி வரையிலான கோயில் சொத்துக்களை மீட்டுள்ளோம்.  தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அறிவுத் துறையாகவும் செயல்படுகிறது. அறநிலையத் துறைக்கு உட்பட்ட கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. ஆளுங்கட்சித் தொகுதி, எதிர்க்கட்சித் தொகுதி என்று நாங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. கல்விக்கு சாதி உட்பட எதுவும் தடையாக இருக்கக் கூடாது. கல்வியை யாராலும் திருட முடியாது. 


ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மாணவர்களுக்கும் 1000 ரூபாய்


தமிழ்ப் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தொடங்கப்படும். கோவையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது’’.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தமிழ்ப் புதல்வன் திட்டம்


உயர் கல்வியில்‌ பெண்களின்‌ சேர்க்கையை அதிகரிக்கும்‌ நோக்கத்துடன்‌, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம்‌ அம்மையார்‌ புதுமைப்பெண்‌ திட்டம்‌ பெண்களின்‌ உயர் கல்வியில்‌ பெரும்‌ முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அவர்களின் உயர் கல்விக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார். 


இதற்காக அண்மையில், ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் கோவையில் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.