Tamil Pudhalvan Scheme: கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.9) தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து, கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 3.28 லட்சம் மாணவர்கள் இதனால் பயனடைய உள்ளனர். 


தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 


இந்தத் திட்டத்தின்கீழ் நிதி உதவி பெற வருமான உச்ச வரம்பு, இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை.




அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நிதி


6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 


இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் மொத்தம் 3.28 லட்சம் மாணவர்கள் இதனால் பயனடைய உள்ளனர்.