நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி நடைபெற இருந்து நீட் தேர்வு 2021 ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தேர்வுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று நேரத்தில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நீட் தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராக வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும். அரசு கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காகவே நீட் பயிற்சி அளித்து வருகிறோம். நீட் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் தெளிவான முடிவு பின்னர் அறிவிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி நாடு முழுவதும் 2021 செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
கொரோனா காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டு இருந்த 3,862 தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் இந்த முறை அதிகரிக்கப்படும் என்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா விதிகளின் அடிப்படையில் தேர்வு எழுதவரும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு மையங்களில் முக கவசம் வழங்கப்படும் என்றும், தேர்வு நடைபெறும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
NEET (UG) 2021 Date: செப்.12ல் நீட் தேர்வு; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!