தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையின்படி, கலைத்திட்ட பாடத்திட்ட வடிவமைப்புக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி, பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மாறும் பாடத்திட்டம்
முதல்கட்டமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 2026- 27ஆம் கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் அமல்படுத்தவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க பாட நிபுணர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பல்துறை நிபுணர்கள் நியமனம்
இதன் தலைவராக மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் நியமிக்கப்பட்டு உள்ளார். உறுப்பினர்களாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 13 நிபுணர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக தொல்லியல் நிபுணரும் பேராசிரியருமான க.ராஜன், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் தீலிப், ஓவியர் மணியம் செல்வன், பல்வேறு பேராசிரியர்கள் உட்பட 13 வல்லுநர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இஸ்ரோ தலைவர், கிரிக்கெட் வீரர் சேர்ப்பு
இவர்கள் அனைவரும் இணைந்து வடிவமைக்கும் பாடத்திட்டத்தை உயர்மட்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து இறுதி செய்யும். இக்குழுவின் தலைவராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருப்பார். துணைத் தலைவராக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இருப்பார்.
உறுப்பினர்களாக இஸ்ரோ தலைவர் நாராயணன், கல்வியாளர் மாடசாமி, கிரிக்கெட் வீரர் அஸ்வின், குழந்தை உரிமைச் செயல்பாட்டாளர் தேவநேயன் உள்ளிட்ட 13 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம்
இந்த நிலையில், பாடத்திட்ட மாற்றத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.