தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொளுத்தும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் 10ஆம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் வெயில் முன்னெப்போதும் இல்லாத அளவு, மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரித்தது. எனினும் கோடை மழை பெய்ததால், நிலம் சற்றே குளிர்ந்தது. ஆனாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் வெயில் கொளுத்தி வருகிறது.


கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.


109 டிகிரி வெயில்


தமிழ்நாட்டில் பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. சென்னையில், 107 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், திருத்தணியில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானது. இதற்கிடையே சென்னையில், வெயிலின் தாக்கத்தால் 12ஆம் வகுப்பு மாணவன் இன்று (மே 31) மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கக் கோரிக்கை விடுத்த அரசியல் தலைவர்கள்


இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஆகியோர் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். 


இதைத் தொடர்ந்து கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ஜூன் 10ஆம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டில்‌ நிலவும்‌ கடும்‌ வெப்ப அலையின்‌ காரணமாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும்‌ மற்றும்‌ அனைத்து வகை தனியார்‌ பள்ளிகளுக்கும்‌ ஜூன்‌ 9ஆம் தேதி வரையில்‌ கோடை விடுமுறை
அளிக்கப்படுகிறது. மீண்டும்‌ அனைத்து வகைப்‌ பள்ளிகளும்‌ 10.06.2024 திங்கள்‌ கிழமை அன்று திறக்கப்படும்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டும் ஒத்திவைப்பு


முன்னதாக, கடந்த 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதும் தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசியதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக, ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.