பொது வினாத்தாளுடன் கூடிய காலாண்டுத் தேர்வு அட்டவணையை மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார். இதன்படி காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. இதன்படி 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதியும் 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதியும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்தத் தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திறன் மதிப்பீடு
தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கல்வி வாரியப் பள்ளிகளில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்ய, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு எனப்படும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இவற்றுக்கு இடையில் பருவத் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இவை தவிர்த்து உயர் வகுப்புகளுக்கு யூனிட் டெஸ்ட் எனப்படும் அலகுத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள், திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. இதன்படி 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதியும் 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதியும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்தத் தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
குறிப்பாக 6, 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை காலாண்டுத் தேர்வு நடக்க உள்ளது. 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 முதல் 4.30 வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.
எந்தத் தேதிகளில் என்ன தேர்வு?
6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வு நடைபெற உள்ளது. செப்டம்பர் 20ஆம் தேதி விருப்ப மொழித் தேர்வும் செப்டம்பர் 21ஆம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 22ஆம் தேதி விளையாட்டுக் கல்வியும் 25ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வும் நடக்க உள்ளது. 26ஆம் தேதி அறிவியல் பாடத் தேர்வும் 27ஆம் தேதி சமூக அறிவியலுக்கான தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பைப் பொறுத்தவரை, செப்டம்பர் 19ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வு நடைபெற உள்ளது. செப்டம்பர் 20ஆம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வும் 22ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வும் நடக்க உள்ளது. 25ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வும் நடக்க உள்ளது. 26ஆம் தேதி விருப்ப மொழிப் பாடத் தேர்வும் 27ஆம் தேதி சமூக அறிவியலுக்கான தேர்வும் நடைபெற உள்ளது.
அதேபோல, 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதியும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்தத் தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அட்டவணையும் வெளியாகி உள்ளது.
பொது வினாத்தாள் அறிமுகம்
முதல்முறையாகத் தற்போது எஸ்சிஇஆர்டி எனப்படும் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், காலாண்டுத் தேர்வுகளுக்குப் பொது வினாத்தாள் முறையைக் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.