அனைத்து வகையான அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளுக்கும் காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள், ஆசிரியர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலாண்டு விடுமுறை எப்போது?
முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு செப்.28 முதல் அக்.2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, 3ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும். பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே அக்.6ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறும் 7ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை நீட்டிப்பது குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில், ’’பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 07.10.2024 (திங்கட் கிழமை) அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது’’ என்று பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வு அட்டவணை
தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் மாநிலக் கல்வித் திட்டத்தில் படிக்கும் 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வு 27ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
முதன்முதலாக தமிழ் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து செப்.21 உடற்கல்வி தேர்வும் 23ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெற்றது. அதை அடுத்து செப்.24 விருப்பப் பாடமும் 25ஆம் தேதி கணிதத் தேர்வும் நடக்கின்றன. செப்டம்பர் 26ஆம் தேதி அறிவியல் தேர்வும் 27ஆம் தேதி சமூக அறிவியல் பாடமும் நடக்க உள்ளது.
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு செப்டம்பர் 19 தொடங்கி 27 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.