ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, விபத்து என பள்ளியில் என்ன நடந்தாலும் பத்திரிகைக்கு முதலில் செய்திதரக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் மற்றும் அதைத் தொடர்ந்த கலவரம் இதற்குக் காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி (வயது 17). பள்ளி விடுதியில் தங்கி படித்த இந்த மாணவி, கடந்த 13-ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார்.


மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் மூலமாக , மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது.


மேலும் அங்கிருந்த பேருந்துகள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதற்கிடையே வேலூர் மாவட்டப் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் 77 அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில், பள்ளியில் என்ன நடந்தாலும் பத்திரிகைக்கு முதலில் செய்திதரக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


அதில் கூறப்பட்டுள்ளதாவது:


1.தலைமை ஆசிரியர்கள் / உதவித் தலைமை ஆசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னர் பள்ளிக்கு வர வேண்டும்.


2. பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடி கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். உதாரணமாக மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்  கொள்வது / ஆசிரியர்கள் மோதல் / பாலியல் வன்முறை / சத்துணவில் பல்லி விழுதல் / சாலை விபத்து இன்னும் பிற அசம்பாவிதம் நடைபெற்றால் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியின் 
பேரில்தான் பத்திரிக்கை செய்தி தர வேண்டும்.


3. குடிநீர் / கழிவறை / ஆசிரியர் பற்றாக்குறை / மாணவர்கள் எண்ணிக்கை / ஆசிரியர்கள்  காலிப் பணியிட விவரம் எதையும் பத்திரிகையாளர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் தெரிவிக்கக் கூடாது.


4. வகுப்பறை பற்றாக்குறையின் காரணமாகவோ அல்லது இதர காரணத்தினாலோ வெளியில் / மரத்தடியில் வகுப்பு நடத்தக் கூடாது. மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய  சத்துணவினை தலைமை ஆசிரியரோ அல்லது சிறப்பாசிரியரோ நேரில் ஆய்வு செய்து  தரமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்றும் முட்டை நல்ல முறையில் உள்ளதா என்றும் ஆய்வு செய்த பின்னர் தான் வழங்கப்பட 
வேண்டும்.


5. பேருந்தில் வரும் மாணவர்கள் பேருந்தின் மேல் கூரையில் அமர்ந்து கொண்டு வருவதைத் தவிர்க்க காலை இறைவணக்கக் கூட்டத்தில் தக்க அறிவுரைகள் தலைமையாசிரியரால்  மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.





6. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விடும்போது முதன்மைக் கல்வி அலுவலருக்கு 
தொலைபேசி மற்றும் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.


7. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் வருகை தந்தவுடன் வருகைப் பதிவேட்டை தலைமை ஆசிரியரால் முடித்து கையொப்பமிட்டு வைக்க வேண்டும்.


8. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை  இ.மெயில் திறந்து பார்க்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக்  கல்வி அலுவலகத்தில் இருந்து இ-மெயில் மூலம் அனுப்பப்படும் அனைத்து  கடிதங்களையும் காலை 10.00 மணி முதல் பள்ளி வேளை முடியும் வரை கண்காணிக்கப்பட்டு பார்த்து அதற்குரிய நடவடிக்கைகளை உடன் எடுத்து அன்றே இ.மெயிலில் முதன்மைக் கல்வி அலுவலர் / மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி விட்டு அதன் தகவலை  அலுவலக கண்காணிப்பாளர் நேர்முக உதவியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 


9. தலைமை ஆசிரியர் பள்ளி வளாகம், கழிப்பறை, மற்றும் வகுப்பறை ஆகியன தூய்மையாக  உள்ளதா என்பதனை சரிபார்த்து, அதனைப் பராமரிக்க வேண்டும். மேலும், வகுப்பறையில் உள்ள கரும்பலகை பெயிண்ட் அடித்து பயன்படுத்தும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


10. அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பாட ஆசிரியர்களுக்கும் பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் / பாட தேர்ச்சி வீதம் / தேர்ச்சி விகிதத்தை உயர்த்த  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.


இவை உள்ளிட்ட 77 உத்தரவுகளைப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.