ஆர்டிஇ எனப்படும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 70,749 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Continues below advertisement

மாணவர்கள் அனைவருக்கும் 9ஆம் வகுப்பு வரை கட்டாயக் கல்வியை அளிக்கும் வகையில், நாடு முழுவதும் 2011ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் சேரும் விளிம்பு நிலை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி விடும். அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 சதவீத மாணவர்கள் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் சேர்க்கப்படுவர்.

தாமதமான ஆர்டிஇ மாணவர் சேர்க்கை 

எனினும் மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய நிதி உரிய காலத்தில் அளிக்கப்படவில்லை. இதனால், தனியார் பள்ளிகளில் சேர நடத்தப்படும் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை தாமதமானது.

Continues below advertisement

எனினும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின்கீழ் மத்திய அரசு, நிதி அளித்தது. இதைத் தொடர்ந்து ஆர்டிஇ மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்றது. பள்ளிகளில் 25 சதவீத சேர்க்கைக்குக் குறைவாக விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று (அக்.30) சேர்க்கை நடைபெற்றது. தொடர்ந்து இன்று (அக்.31) குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

70,749 மாணவர் சேர்க்கை

இதில், மொத்தம் 70,749 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக எல்கேஜியில் 70350 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 4,070 மழலையர் பள்ளிகளில் 28,077 மாணவர்களும் 3,647 மெட்ரிக் பள்ளிகளில் 42,273 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மொத்தம் 7717 பள்ளிகளில் 70,350 மாணவர்கள் எல்கேஜி வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

அதேபோல, ஒன்றாம் வகுப்பில் 99 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 4 மழலையர் பள்ளிகளில் 5 மாணவர்களும் 17 மெட்ரிக் பள்ளிகளில் 94 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மொத்தம் 21 பள்ளிகளில் 99 மாணவர்கள் 1ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். கடந்த 2024- 25ஆம் கல்வியாண்டில், ஆர்டிஇ  சட்டத்தின்கீழ் 71,306 மாணவ- மாணவிகள் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.