தனியார் பள்ளிகளில் இலவசக் கல்விக்கு வழிவகை செய்யும் ஆர்டிஇ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி இணையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் நேரடியாக பள்ளி மூலமாகவே விண்ணப்பிக்க முடியும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ’’பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரை அணுகவும். அதன் பிறகு தலைமை ஆசிரியர், தனக்கு அளிக்கப்பட்ட EMIS ID முலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த எண்ணிக்கை 25 சதவீதத்தைத் தாண்டினால், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடைபெறும்’’ என்று தெரிவித்தனர்.
அதேபோல ஏற்கெனவே பள்ளியில் சேர்ந்த மாணவர்கள், அந்தந்தப் பள்ளிகளில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். புதிதாக பள்ளிகளில் சேர நினைக்கும் மாணவர்கள் யாரும் இம்முறை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க முடியாது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தாமதமாக தொடங்கிய மாணவர் சேர்க்கை நடைமுறைகள்
மத்திய அரசின் அனைவருக்குக் கல்வி திட்டத்தின் நிதி, தமிழ்நாட்டுக்கு அளிக்கப்படாமல் இருந்ததால் தாமதமாக, 2025–26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளன.
அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் அதாவது எல்கேஜி அல்லது 1ஆம் வகுப்பில், 25% ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்கான சேர்க்கை நடைமுறைகள் RTE Act, 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு: rteadmission@tnschools.gov.in
Help line: 14417