10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நெருங்கும் சூழலில், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே ஆசிரியர்களே ஸ்கிரைப் ஆக நியமிக்கப்படுவர் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் கண் பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்ப்பேச இயலாதோர், எதிர்பாராத விபத்தால் கை முறிவு ஏற்பட்டு தேர்வு எழுத இயலாதோர், மன நலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறைபாடு உள்ளவர்கள், நரம்பியல் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வு எழுதும்போது, ஸ்கிரைப் எனப்படும் சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்படுவர்.

கடந்த காலங்களில் ஆசிரியர்களே நியமனம்

அப்படி நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர்கள் அல்லது கல்வியாளர்களாக இருப்பார்கள். இதற்கிடையே, 2026ம் ஆண்டு பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர்களாக கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அரசு தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்து இருந்தார்.

Continues below advertisement

இது ஆசிரியர்கள் மத்தியிலும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்கள் கண்டனம்

ஆசிரியர்களை விடுத்து, மாணவர்களையும், தன்னார்வலர்களையும் ஸ்கிரைப்பாக நியமிப்பது மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி பெறும் வாய்ப்பை மறுதலிக்கும் செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் ஆசிரியர்கள் மட்டுமே ஸ்கிரைபாக நியமிக்கப்படுவர் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே

இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியில், ’’மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகளில் கடந்த ஆண்டினைப் போலவே அரசாணை (நிலை) எண் 54, பள்ளிக் கல்வி (பொது1) துறை, நாள் 29.02.2016 மற்றும் அரசாணை (நிலை) எண் 62, பள்ளிக் கல்வி (அ.தே) துறை, நாள் 25.03.2022 ஆகியவற்றைப் பின்பற்றியே சொல்வதை எழுதுபவர்கள் (Scribes) நியமிக்கப்பட உள்ளனர்.

எனவே, முந்தைய ஆண்டுகளைப் போல ஆசிரியர்களையே சொல்வதை எழுதுபவர்களாக (Scribes) நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.