மயிலாடுதுறை மாவட்டம், நீடூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்வி மற்றும் கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கும் விதமாக அமைந்த இந்த நிகழ்வை, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் முறைப்படி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

கண்காட்சியின் மையப்புள்ளி 

பள்ளி வளாகம் முழுவதும் மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளாலும், இயற்கை சார்ந்த படைப்புகளாலும் நிறைந்திருந்தது. குறிப்பாக, இன்றைய நவீன உலகில் இயற்கையை மறந்து வரும் தலைமுறைக்கு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய மரங்களின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் மாணவர்கள் அமைத்திருந்த அரங்குகள் கண்காட்சியின் மையப்புள்ளியாக அமைந்தன.

Continues below advertisement

கற்பகதருவின் சிறப்பம்சம் 

இக்கண்காட்சியில் இரண்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறு வயது மாணவர்கள், தென்னை, பனை மற்றும் வாழை மரங்களின் பயன்பாடுகளை மிக விரிவாகவும் விளக்கமாகவும் காட்சிப்படுத்தியிருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கற்பகதரு என்று அழைக்கப்படும் பனை மரத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், பனை ஓலைகளால் ஆன சிறிய குடில் ஒன்றை மாணவர்கள் தத்ரூபமாக உருவாக்கியிருந்தனர். அந்த குடிலுக்குள் பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர் மற்றும் பனை வெல்லம் போன்ற உணவுப் பொருட்கள் மட்டுமன்றி, பனை ஓலைகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், விசிறிகள் மற்றும் அழகுச் சாதனப் பொருட்களையும் பார்வைக்கு வைத்திருந்தனர். 

தனித் தனி அரங்குகள் 

பனை மரம் நிலத்தடி நீரை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும், அதன் ஒவ்வொரு பாகமும் மனித வாழ்விற்கு எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதையும் மழலை மொழியில் மாணவர்கள் விளக்கிய விதம் பெற்றோர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதேபோல், தென்னை மற்றும் வாழை மரங்களின் மருத்துவ குணங்கள் மற்றும் பொருளாதார பயன்கள் குறித்தும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

வாழை இலையில் உண்பதன் நன்மைகள், வாழைத் தண்டின் மருத்துவப் பயன்கள் மற்றும் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் தூய்மை குறித்து மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். ரசாயனக் கலப்பில்லாத இயற்கை உணவுகளே ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை என்பதை வலியுறுத்தும் வகையில், மாணவர்களே தயாரித்த மூலிகை பானங்கள் மற்றும் ஆரோக்கிய உணவுகள் அடங்கிய அரங்குகள் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தின.

தற்போது பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் வாழ்வியல் நோய்கள் பரவி வரும் சூழலில், மாணவர்களின் இந்த ஆரோக்கியம் சார்ந்த படைப்புகள் காலத்திற்கு ஏற்ற மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. இந்தக் கண்காட்சியில் மற்றொரு சிகரமாக அமைந்தது ஒரு மாற்றுத்திறனாளி மாணவனின் அபாரமான படைப்பு. அந்த மாணவர் பழங்கால எகிப்திய பிரமிடுகளின் நுட்பமான அமைப்பைச் சிறிய கற்கள் மற்றும் மணலைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைத்திருந்தார். பிரமிடுகளின் கட்டடக்கலை ரகசியங்கள் மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணி குறித்து அந்த மாணவர் தன்னம்பிக்கையுடன் ஆற்றிய உரை, அங்கு வந்திருந்த பார்வையாளர்களின் மனதை நெகிழச் செய்ததுடன், பெரும் பாராட்டுக்களையும் பெற்றது. உடல் ரீதியான சவால்களைக் கடந்து அந்த மாணவர் காட்டிய ஆர்வம் மற்ற மாணவர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைந்தது.

அக்கறையுடன் கூடிய மருத்துவ முகாம்கள்

அறிவியல் படைப்புகள் மட்டுமன்றி, சமூக அக்கறையுடன் கூடிய மருத்துவ முகாம்களும் இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக இடம்பெற்றன. மயிலாடுதுறை தனியார் ஆப்டிகல்ஸ் நிறுவனம் சார்பில் கண்காட்சியைப் பார்வையிட வந்த பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல், தனியார் சமுதாயக் கல்லூரி மாணவர்கள் இணைந்து பார்வையாளர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொண்டு, முறையான உணவு முறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். கல்வி என்பது வெறும் புத்தக அறிவோடு நின்றுவிடாமல், சமூக சேவையோடும் இணைய வேண்டும் என்பதற்கு இந்த முயற்சி ஒரு சான்றாக அமைந்தது.

இந்த அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவில் வருகை தந்திருந்தனர். தனியார் பள்ளி மாணவர்களின் வினோதமான மற்றும் அறிவுப்பூர்வமான படைப்புகளைப் பார்த்த அரசுப் பள்ளி மாணவர்கள், இது தங்களுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்தனர். எதிர்காலத்தில் தாங்களும் இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இக்கண்காட்சி ஒரு நல்ல முன்மாதிரியாக அமைந்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். தங்கள் குழந்தைகளின் தனித்திறமைகளை நேரில் கண்டு மகிழ்ந்த பெற்றோர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதலையும் மாணவர்களின் கடின உழைப்பையும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.