ஆர்டிஇ எனப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கட்டணமான சுமார் 360 கோடி ரூபாயைத் தனியார் பள்ளிகளுக்குத் தராமல் தமிழக அரசு நிலுவையில் வைத்துள்ளதால் அதைக் கண்டித்து மக்களவைத் தேர்தலை தனியார் பள்ளி ஆசிரியர்களும், நிர்வாகிகளும் புறக்கணிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அத்துடன் வரும் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்துவதில்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


இதுகுறித்து தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், உயர்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார், தனியார் பள்ளிகள் இயக்குனரகத்துக்குக் கடிதம் எழுதி உள்ளார்.


அந்தக் கடிதத்தில் கூறி இருப்பதாவது:


’’தமிழகத்தில் சுயநிதி அடிப்படையில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு காலம் காலமாய் வழங்கி வந்த தொடர் அங்கீகாரம் கூட சுமார் 10,000 பள்ளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் பல்லாயிரக்கணக்கில் பணம் கேட்டு, மிரட்டி வாங்கி கோப்புகளை அனுப்பியும் தனியார் பள்ளிகள் இயக்குனர் அலுவலகத்திலேயே வருடக் கணக்கில் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.


சேலம் மாவட்ட கல்வி அலுவலர் ஏன் இதுவரை அங்கீகாரம் பெறவில்லை என்று கேட்டு, அங்கீகாரம் பெறவில்லை என்றால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம், ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸும் கொடுத்துள்ளார்.


வட்டி கூடக் கட்ட முடியாமல் தத்தளிப்பு


தொடர் அங்கீகாரம் கொடுக்காதது யார் தவறு? நான்கு சான்றுகளை வைத்துக்கொண்டு அங்கீகாரம் வழங்கிய காலமெல்லாம் போய் இன்றைக்கு புதிது புதிதாக சான்றுகளைக் கேட்டும் அங்கீகாரம் தர மறுத்தும் காலம் தாழ்த்தி வருவதால் பள்ளி வாகனங்கள் எப்..சி செய்ய முடியாமல், கடன் வாங்க முடியாமல், வாங்கிய கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.


எனவே அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் பழைய பள்ளிகளுக்கு எந்தவித நிர்ப்பந்தமும் நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக மூன்றாண்டு காலங்களுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கிட வேண்டும்.


2 ஆண்டுகளுக்கு கட்டணம் பாக்கி


அதே போல் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் மாணவர்களை சேர்த்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி கட்டண பாக்கி இதுவரை வழங்கவில்லை.


அரசாணை வெளியிட்டும் வழங்கவில்லை


சங்கத்தின் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னால் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆர்.டி .இ கல்வி கட்டண பாக்கி  386 கோடி ரூபாய் வழங்குவதாக அரசாணை வெளியீட்டும் இதுவரை வழங்கவில்லை.


கல்வியாண்டின் கடைசி நாட்கள் வந்த பின்னும் இதுவரை கல்விக் கட்டண பாக்கி தராததால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாத சம்பளம் தர முடியாமல் பள்ளி நிர்வாகிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்.


பள்ளிகளின் வங்கிக் கணக்கு எண் மாறவில்லை. வங்கி மாறவில்லை. ஐஎஸ்எப்சி கோடு மாறவில்லை. பல ஆண்டுகளாக தரக்கூடிய அதே வங்கிக் கணக்கு எண்ணில், பணத்தைக் கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது?


எனவே தனியார் பள்ளிகளுக்கு உரிய கல்வி கட்டண பாக்கியை உடனடியாக தர வேண்டும் இல்லையென்றால் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் அனைவரும் புறக்கணிப்பது என்றும், தனியார் பள்ளிகளுக்குரிய கல்விக் கட்டண பாக்கி கிடைக்கும் வரை வரும் கல்வி ஆண்டிற்கான RTE 25% மாணவர்களை சேர்க்காமல் அனைவரும் புறக்கணிப்பது என்றும் முடிவு எடுத்து இருக்கிறோம்’’.


இவ்வாறு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.