பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பகுதிநேர ஊழியர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உதவி தலைமைச் செயலாளர்கள், துறைத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதி, 1973 அடிப்படையில், இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் தங்கள் துறை சார்ந்த ஊழியர்களிடம், இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும் எனவும், நன்னடத்தை விதிகளை மீறும் அரசு ஊழியர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களின் ஊதியம் பிடித்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போராட்டத்தின் பின்னணி என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஆசிரியர்களிடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீண்ட காலமாக காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ  அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

ஊதியம் ரத்து, பணி நீக்கம்

அதற்காக இன்று (மார்ச் 19) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மீது ஊதியம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மார்ச் 23ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்

தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதி பெரிய அளவிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த ஜாக்டோ ஜியோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.