அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் புத்தகங்கள், நோட்டுகள், எழுதுபொருட்கள், சீருடைகள், காலணிகள் ஆகியவற்றை அரசே விலையில்லாமல் வழங்கி வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இவை தவிர்த்து சானிட்டரி நாப்கின்கள், கையடக்கக் கணினி ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் யாருமே யோசிக்காத ஒன்றை, அதே சமயம் அத்தியாவசியமான பொருளை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கி வருகிறார் எஸ்டூஎஸ் என்னும்  (Service to Society) தன்னார்வ அமைப்பின் நிறுவனர் ரவி சொக்கலிங்கம். இதனால் தங்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாக மாணவிகள் பெருமிதம் பொங்கச் சொல்கின்றனர். 


அப்படி அவர் என்னதான் வழங்குகிறார்?


எஸ்டூஎஸ் அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 'கண்மணி' என்ற பெயரில், அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உள்ளாடை வழங்கும் அசத்தல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1,000 மாணவிகளுக்கு உள்ளாடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் குறித்து ரவி சொக்கலிங்கம் ABP Nadu-விடம் விரிவாகப் பேசினார். 




''மாணவிகளின் தேவைக்கு ஏற்ப, வெவ்வேறு அளவுகளில் பிரேசியர், சிம்மீஸ் மற்றும் பேன்ட்டி ஆகிய 3 உள்ளாடைகள் வாங்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. தீபாவளிக்கு இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை 1000 மாணவிகளுக்கு உள்ளாடைகள் வழங்கப்பட்டுள்ளன. 


குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் வளைய பாளையம், காஞ்சிக்கோவில், சிந்தகவுண்டன் பாளையம், கூகலூர் ஆகிய 4 பள்ளிகள், கரூரில் தாழைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சேலம் அருகே செம்மாண்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, புதுக்கோட்டை அரசுப் பள்ளி ஆகிய 7 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கு தலா 2 செட் உள்ளாடைகள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூரில் உள்ள ஆடை நிறுவனத்தில் இருந்து உள்ளாடைகள் நேரடியாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. 6 மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து உள்ளாடைகளைக் கொடுக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.


யாருக்கெல்லாம் உள்ளாடைகள்?


தற்போது 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கும் தேவை உள்ள பிற வகுப்பு மாணவிகளுக்கும் உள்ளாடைகள் வழங்குகிறோம். 'செய்வன திருந்தச் செய்' என்ற நோக்கில், ஒவ்வொரு மாணவிக்கும் பெண் ஆசிரியர்களைக் கொண்டு, முறையாக அளவு எடுக்கச் செய்கிறோம். தேவைப்படும் இடத்தில் உள்ளூர் பெண் தையலர்களும் இணைந்துகொள்கின்றனர். ஓர் எக்ஸல் அட்டையில் தெளிவாக அளவுகளைக் குறித்து, ஆடை நிறுவனத்துக்கு அனுப்புகிறோம். அவர்கள் உயர் தரத்துடன் உள்ளாடைகளைத் தைத்துக் கொடுக்கின்றனர்'' என்கிறார் ரவி சொக்கலிங்கம். 




ஆண்களோ, பெண்களோ அவர்கள் அணியும் உடை, தன்னம்பிக்கையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணியாக உள்ளது. குறிப்பாக தரமான, சரியான உள்ளாடைகள் அவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன. 


சரியான உள்ளாடைகள் மாணவிகளிடையே உருவாக்கும் மாற்றம் குறித்துப் பேசிய அவர், ''அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உள்ளாடைகளை வழங்குவதன் மூலம், மாணவிகளுக்குத் தனிப்பட்ட சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகிறது. இதன்மூலம், அவர்களின் உடல் மீதான தயக்கம் மற்றும் பயத்தை நீக்க முடிகிறது. மாணவிகள் இயல்பாகப் பள்ளிக்கு வரும் சூழலை உருவாக்க முயன்று வருகிறோம். 


உள்ளாடைகள் வழங்கப்படுவது எப்படி?


அந்தந்த ஊரைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார மையங்களின் தலைமை மருத்துவர், உதவி மருத்துவர்கள் ஆகியோரை அழைத்து வந்து, மாணவிகளுக்கு உள்ளாடை சுகாதாரம், அதன் முக்கியத்துவம் பற்றிப் பேச வைக்கிறோம். அதேபோல, பெற்றோர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முன்னிலையில் இந்த உள்ளாடைகள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் பள்ளிகளில் தன்னார்வ அடிப்படையில் உள்ளாடைகள் அளிப்பது சாத்தியமாகி வருகிறது'' என்கிறார் ரவி சொக்கலிங்கம். 


மாணவிகள் என்ன சொல்கின்றனர் என்று கேட்டதற்கு, ''அவர்களுக்குத் தேவையும் மகிழ்ச்சியும் இருந்தாலும் கூடவே கூச்சமும் இருந்தது. இதுவரை எந்தப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு உள்ளாடைகள் வழங்கப்பட்டதே இல்லை. இதனால் பொதுவில் உள்ளாடைகளைப் பெற்றுக் கொள்வதில் மாணவிகள் தயக்கத்தை உணர்ந்தனர். பெற்றுக்கொண்டபிறகு வார்த்தைகளால் சொல்ல முடியாவிட்டாலும், அவர்களின் கண்களில் அன்பும் நன்றியும் நிறைந்திருந்ததை உணர முடிந்தது'' என்றார். 




இந்த யோசனைக்கான முதல் புள்ளி குறித்தும் பேசினார். ''அண்மையில் பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்தான் தேவை உள்ள ஏழை மாணவிகளுக்கு உள்ளாடைகளை வழங்கலாமே என்ற யோசனையை முன்வைத்தார். உடனே ஆசிரியர்களுடன் பேசி திட்டத்தைத் தொடங்கிவிட்டோம். என்னுடைய பங்களிப்புடன் நண்பர்கள் சிலரும் இதற்குப் பொருளாதார ரீதியாக உதவுகின்றனர். 


ஏற்கெனவே ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு 'அம்மா' என்ற பெயரில், சத்துணவுப் பெட்டகங்களில் வழங்குகிறோம். இந்தத் திட்டம் முதல்கட்டமாக 6 அரசு மருத்துவனைகளில் தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது'' என்கிறார் ரவி சொக்கலிங்கம். 


அதிகரிக்கும் பந்தம்


''அரசு மகளிர் பள்ளிகளோடு, இரு பாலரும் படிக்கும் பள்ளிகளுக்கும் உள்ளாடைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இடையேயான பந்தமும் கூடியுள்ளதாக ஆசிரியர்கள் சொல்கின்றனர். இதன் மூலம் ஆசிரியர்- மாணவர் பிணைப்பு அதிகரித்துள்ளது. 'நாங்கள்கூட இதை யோசித்ததில்லை, எங்களுக்கே வராத சிந்தனை இது!' என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் நெகிழ்ந்தனர். 


 






  
இந்த முன்னெடுப்பு பெண்ணுடல், மாதவிடாய் சுகாதாரம் குறித்த உரையாடலுக்கு வழிவகுத்திருக்கிறது. விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. 'ஆசிரியரிடம்  இதுபற்றிக் கூட என்னால் வெளிப்படையாகப் பேச முடியும்' என்ற வகையில், ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையேயான திரை விலகி இருக்கிறது'' என்று மகிழ்கிறார் ரவி சொக்கலிங்கம். 


அரசுப் பள்ளிகளில் இத்தகைய முன்னுதாரண முன்னெடுப்புகள் பல்கிப் பெருகட்டும்.