2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் மார்ச் 1ஆம் தேதி அன்றில் இருந்து தொடங்க அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குஅனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக உரிய அறிவுரைகள் வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Continues below advertisement

யாரையெல்லாம் சேர்க்கலாம்?

மேலும், அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5+ வயதுடைய குழந்தைகளை அந்தந்தக் குடியிருப்புப் பகுதிகளில் (Habitation and Catchment Area) அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்வதற்கும் அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் குழந்தைகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு அல்லாது பிற வகுப்புகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் மாணவர்களுக்கு உரிய வகுப்புகளுக்கான சேர்க்கை இடங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் வழங்க தேவையான அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரசுப் பள்ளி நலத்திட்டங்கள்

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms) உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Labs), இன்றைய டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கணினிசார் அடிப்படை அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தும் TN SPARK திட்டம் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வினை அனைத்து பொது மக்கள் மற்றும் அனைத்து பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Continues below advertisement

அதேபோல, பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர் சேர்க்கை குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். விழிப்புணர்வு மற்றும் சேர்க்கைப் பேரணி நடத்தவும் அரசுப் பள்ளிகளுக்கென வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.