பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மாநில கல்விக் கொள்கை பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடை செய்யவோ அல்லது வரையறுக்கவோ குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மாநில கல்விக் கொள்கை பரிந்துரை செய்துள்ளது.  

நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே மாணவர்களைத் தயார் செய்வதா?

பாடத் திட்டத்தை முழுமையாக முடிக்காமலேயே நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே மாணவர்களைத் தயார் செய்வதால், இந்த நடவடிக்கையை எமெற்கொள்ள வேண்டும் என்று கல்விக் கொள்கை வரையறை குழு தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து, மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, நிலைமை, எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

2024-ல் தாக்கல் செய்யப்பட்ட பரிந்துரைகள்

அதன்படி 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் குழு அமைக்கப்பட்டது. குழுவின்‌ தலைவராக புதுடெல்லி உயர் நீதிமன்ற முன்னாள்‌ தலைமை நீதிபதி முருகேசன்‌  நியமிக்கப்பட்டார். இக்குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள்‌ தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் குழுவின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினர் இணைந்து, மாநில கல்விக் கொள்கையைத் தயாரித்தனர்.

இக்குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கல்விக் கொள்கையைத் தமிழக அரசிடம் தாக்கல் செய்தது. எனினும் இதன் பரிந்துரைகள் இதுவரை பொதுவெளிக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.