கல்லூரி செல்லாத உங்கள் நண்பர்களை  கண்டறியும் முயற்சியில் உதவுங்கள் என மாணவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்து, கல்லூரி செல்லாத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கல்லூரிக்கு அனுப்பும் முயற்சியில் மாணவர்களின் உதவியை தமிழ்நாடு அரசு நாடியுள்ளது. இது தொடர்பாக சினிமா பிரபலங்களை வைத்து காணொளி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

குறிப்பாக திரை நடிகர் கலை அரசன் இதுதொடர்பாக வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். இந்த வீடியோவை பள்ளிக் கல்வித்துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

 

’’உங்களுடன் 12ஆம் வகுப்பு வரை படித்த நண்பர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். உயர் கல்வியை தொடர்கிறார்களா, இல்லையா என்பதை கண்டறிய வேண்டும். நண்பர்களின் தொடர்பு எண்கள் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

 

அப்படி உங்களால் யாரை தொடர்புகொள்ள முடியவில்லையோ அவர்களை, அவர்களின் வீடு அல்லது உறவினர்கள், ஏரியா நண்பர்கள் மூலம் விசாரியுங்கள். அவர்களில் யார் உயர் கல்வியை தொடரவில்லை என்பதை கண்டறிந்து, அந்த தகவல்களை நீங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுங்கள்.

 

உயர் கல்வியை தொடர முடியாத மாணவ- மாணவிகளுக்கு உதவ அரசு தயாராக உள்ளது. உங்களை போலவே உங்கள் நண்பர்களும் கல்லூரி படிப்பை தொடர உதவி செய்யுங்கள்’’.

 

இவ்வாறு நடிகர் கலை அரசன் வீடியோவில் பேசி உள்ளார்.