சூப்பர் 12 குரூப் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. 120 பந்துகளில் 201 ரன்கள் இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 குரூப் 1 சுற்றில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கியது.


டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன், டிவோன் கான்வே ஆகியோர் களம் புகுந்தனர்.


தொடக்கம் முதலே ஃபின் ஆலன் அதிரடி காட்டத் தொடங்கினார். 16 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 42 ரன்களை விளாசினார். அதிரடி தொடக்கம் கொடுத்த ஃபின் ஆலன், ஹேசில்வுட் வீசிய 5வது ஓவரின் முதல் பந்தில் போல்டு ஆனார்.


பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். மறுமுனையில் விக்கெட் கீப்பர் டிவோன் கான்வே அரை சதம் பதிவு செய்தார். வில்லியம்சன் தோள் கொடுக்க கான்வே அதிரடி காண்பித்தார். 13வது ஓவரின் கடைசி பந்தில் ஜம்பா வீசிய பந்தில் எதிர்பாரதவிதமாக எல்பிடபிள்யூ ஆனார் வில்லியம்சன்.


பின்னர் வந்த கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்தபடியாக ஆடம் ஜம்பா 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.


கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து விக்கெட் கீப்பர் கான்வே 58 பந்துகளில் (2 சிக்சர்கள், 7 பவுண்டரிகள்) 92 ரன்கள் விளாசினார். அவருடன் ஜேம்ஸ் நீஷம் 26 ரன்களுடன் (2 சிக்சர்கள்) களத்தில் இருந்தார்.