தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்த முதல் கட்டமாக 262 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


சட்டப்பேரவை கூட்டத்தொடர்


இந்த ஆண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. வழக்கமாக ஒரு கூட்டம் முடிந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் கூட வேண்டும்.


அதாவது ஏப்ரல் 21 ஆம் தேதி முடிவடைந்த கூட்டத்தை தொடர்ந்து அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில்,  அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர்  இன்று நிறைவடைந்தது. சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்தார்.


மூன்றாவது நாளான இன்று, வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதேபோல, தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட முன்வடிவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்தார்.


ரூ.262 கோடி நிதி ஒதுக்கீடு


இந்நிலையில், நாகர்கோவிலைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘’26 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 55 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குத் தேவயான ஆய்வகங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகள், விடுதிகள் மற்றும் இதர வசதிகள் ஆக்ய உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 2022-23ஆம் நிதியாண்டில் 262 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ள 1000 கோடி ரூபாயில், இந்த ஆண்டு முதல் கட்டமாக 262 கோடி ரூபாய் ஒதுக்க்கப்பட்டுள்ளது. படிப்படியாக கல்லூரிகளின் தேவைகளுக்கு ஏற்பவும் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்கவும் அரசின் நிதிநிலைக்கு உட்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.