புதுமைப் பெண் திட்டம்: புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்க டெல்லி முதல்வர் சென்னை வருகிறார். இதற்கான அழைப்பிதழைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அர்விந்த் கேஜ்ரிவாலிடம் வழங்கினார். 


கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார்.


தாலிக்குத் தங்கம் திட்டம்


தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கெனவே இருந்த மூவலூர்‌ ராமாமிர்தம்‌ அம்மையார்‌ திட்டமான தாலிக்குத் தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார். இது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றது.


அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது.  


யாருக்கெல்லாம் வழங்கப்படும்?


ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டம் பொருந்தும்.


சான்றிதழ் , பட்டயம் , இளங்கலைப் பட்டம் , தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்றவைகளில் சேருபவர்களுக்கு இது பொருந்தும். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.


அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தொழில்நுட்பக்‌ கல்வி, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்கு விண்ணப்பித்தனர்.


இத்திட்டத்தினைச் செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில்‌ இணைய தளம்‌ தொடங்கப்பட்டது.


இந்நிலையில் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார்.


டெல்லியில் உள்ளதைப் போன்ற மாதிரிப் பள்ளிகள் மற்றும் நிபுணத்துவம் பெற்ற பள்ளிகள் சிலவற்றை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அர்விந்த் கேஜ்ரிவாலிடம் வழங்கினார். இந்தத் திட்டத்துக்கு புதுமைப் பெண் திட்டம் (Puthumai Pen Thittam) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


3 லட்சம் மாணவிகள் விண்ணப்பம்


இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 3 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேரும் 9,981 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. 


அதேபோல பிற படிப்புகளிலும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு, புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 உயர் கல்வி உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.