பொறியியல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (செப்.10) தொடங்கிய நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது.
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இடம் பிடித்தவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு, கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி வரும் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 தொடங்கி அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வராததால் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செப்.7ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப்.10ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த செப்.7ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.
அதன்படி, முதல்கட்ட கலந்தாய்வு இன்று முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. கட் - ஆப் மதிப்பெண் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப். 25 முதல் 27ம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.13 முதல் அக்.15 வரையிலும், நான்காம் கட்ட கலந்தாய்வு அக்.29 முதல் அக்.31 வரையிலும் நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் இடங்களைத்தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற புதிய முறையும் நடப்பாண்டு முதல் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் எனத் தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் பொதுசெலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும்.
முன்னதாக பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேசியதாவது:
இன்று பொது பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 14524 ரேங்க் வரை பெற்றுள்ளவர்கள் 12ஆம் தேதி வரை கலந்துகொள்வார்கள். 15ஆம் தேதி அவர்களுக்கான சேர்க்கை ஆணை கொடுக்கப்படும். அதிலிருந்து ஒரு வார காலதிற்குள் பொறியியல் கட்டணம் ரூ.15,000 செலுத்த வேண்டும்.
இதுவரை 5,124 மாணவர்கள் ஆப்ஷன் அனுப்பி உள்ளனர். 2,761 நபர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் கேட்டுள்ளனர். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைகழகத்தில் காலி இடங்கள் இருந்தது. நடப்பாண்டில் அந்த நிலை உருவாகக் கூடாது என்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி 23,321 விண்ணபங்கள் கிடைத்து இருக்கிறது. நடப்பாண்டில் பாலிடெக்னிக் படித்து வரும் மாணவர்கள் 852 காலிப் பணியிடங்களுக்கு 811 மாணவர்கள் அண்ணா பல்கலைகழகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிக அளவில் உயர்கல்வி பயிலும் விகிதத்தில் தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது. இன்று மட்டும் உதவி மையத்தின் மூலமாக 200 மாணவர்கள் தங்களது குறைகளை கேட்டு தெரிவு பெற்றுள்ளனர். தனியார் பொறியியல் கல்லூரி கட்டணம் உயர்த்த வேண்டாம் எனக் கேட்டு கொண்டுள்ளோம். இது குறித்து அவர்களோடு கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.