2021 ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 70 லட்சத்துக்கும் ( 7030345) அதிகமானோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஆண்கள் 3293401 பேர், பெண்கள் 3736687 பேர், பால் புதுமையைனர் 257 ஆவர்.
ஆண்கள் | 3293401 |
பெண்கள் | 3736687 |
மூன்றாம் பாலினம் | 257 |
மொத்தம் | 7030345 |
வயது வாரியான நிலவரங்கள்: 85%க்கும் அதிகமான பதிவுதாரர்கள் 35 வயதிற்கு குறைவானவர்கள். 58 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தமிழககத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. கடந்தாண்டு, கொரோனா பொதுமுடக்க நிலையால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சமாளிக்க ஓய்வு பெறும் வயதை 60 ஆக தமிழக அரசு அதிகரித்தது. தற்போது, மீண்டும் 58 ஆகக் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18-வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் | 1325333 |
19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் | 1788012 |
24 முதல் 35 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள் | 2627948 |
36 முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் | 1277839 |
58 வயதிற்கும் மேற்பட்டவர்கள் | 11213 |
மொத்தம் | 7030345 |
மாற்றுத் திறனாளி பதிவு தாரர்களது விவரங்கள்:
மாற்றுத்திறனாளிகளின் வகை | ஆண் | பெண் | மொத்தம் |
கை,கால் குறைபாடுடையோர் | 70032 | 36553 | 106585 |
விழிப்புலனிழந்தோர் | 11458 | 5176 | 16634 |
காது கேளாதோர் & வாய் பேசாதோர் | 9417 | 4441 | 13858 |
மொத்தம் | 90907 | 46170 | 137077 |
முன்னதாக, 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்காதவர்கள் அடுத்த மூன்று மாதத்திற்குள் வேலைவாய்ப்பு அலுவவலகத்தில் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை 204, 28.5.2021ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.5.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அல்லது 27.8.2021-க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாசிக்க:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு ! - தமிழக அரசு அறிவிப்பு