தகுதியான வேலை கிடைத்த பின்னர் படிப்பதை நிறுத்தி விடாதீர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 416 பட்டதாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்டங்களை வழங்கினார். 


இந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் முதல்வர் பேசியதாவது:


’’பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியமான நாள் இன்று. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன் மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் படித்த பல்கலை. இது. நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் இங்கு படித்துள்ளனர்.


இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் விஜயலட்சுமி ரெட்டி உட்பட பல சிறந்த பெண் ஆளுமைகளை வழங்கிய பெருமை இந்த பல்கலைக்கழகத்துக்கு உண்டு. தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா இங்கு படித்தவர்தான். நானும் இதே பல்கலை.யைச் சேர்ந்தவன்தான். அந்த வகையில் சீனியராக இன்று இங்கு வந்துள்ளேன்.


தென்னிந்தியாவுக்கு மட்டுமல்லாமல், நவீன இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பை சென்னை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.  தகுதியான வேலை கிடைத்த பின்னர் படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். கல்வியே அனைவருக்கும் மிகப்பெரிய சொத்து.


தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில்‌ சிறந்து விளங்கும்‌ மாநிலமாக இருக்கிறது என்பதை நீங்கள்‌ அனைவரும்‌ அறிவீர்கள்‌. இந்தியாவில்‌ தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில்‌ தமிழ்நாட்டில்‌ மட்டுமே 18 நிறுவனங்கள்‌ உள்ளன.


தலைசிறந்த 190 பல்கலைக்கழகங்களில்‌ 21 தமிழ்நாட்டில்தான்‌ உள்ளன.
தலைசிறந்த 100 கல்லூரிகளில்‌ 32 கல்லூரிகள்‌ தமிழ்நாட்டில்‌ உள்ளன.
தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில்‌ 10 தமிழ்நாட்டில்‌ உள்ளன.
தலைசிறந்த 200 பொறியியல்‌ கல்லூரிகளில்‌ 35 கல்லூரிகள்‌ தமிழ்நாட்டில்‌ உள்ளன.
தலைசிறந்த மேலாண்மைக்‌ கல்வி நிறுவனங்களில்‌ 11 தமிழ்நாட்டில்‌ உள்ளன.
190 மருத்துவக்‌ கல்வி நிறுவனங்களில்‌ 8 தமிழ்நாட்டில்‌ உள்ளன.
40 பல்மருத்துவக்‌ கல்வி நிறுவனங்களில்‌ 9 தமிழ்நாட்டில்‌ உள்ளன.
50 சட்டக்‌ கல்லூரிகளில்‌ 2 தமிழ்நாட்டில்‌ உள்ளன.
50 கட்டடக்‌ கலைக்‌ கல்லூரிகளில்‌ 6 தமிழ்நாட்டில்‌ உள்ளன.


இப்படி நான்‌ அடுக்கிக்‌ கொண்டே போக முடியும்‌. கல்வியில்‌ சிறந்த மாநிலமாக நாம்‌ உயர்ந்து நிற்கிறோம்‌. 100 ஆண்டுகளுக்கு முன்னால்‌ நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில்‌ கல்விக்காக போட்ட விதைதான்‌ இதற்குக்‌ காரணம்‌.


பள்ளிக்‌ கல்வியை வளர்த்தார்‌ பெருந்தலைவர்‌ காமராசர்‌‌. கல்லூரிக்‌ கல்வியை முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ விரிவு செய்தார்‌. இன்று நம்முடைய திராவிட மாடல்‌ ஆட்சியில்‌ உயர் கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம்‌. ஆராய்ச்சிக் கல்வியாக அதனை உயர்த்தி வருகிறோம்‌. அனைத்து மாணவர்களுக்கும்‌ உரிய வழிகாட்டுதல்களை வழங்கி தனி திறமையானவர்களாக வளர்த்தெடுத்து வருகிறோம்‌.


உயர்கல்வி நிறுவனங்களில்‌ பணியாற்றும்‌ பேராசிரியர்கள்‌ மற்றும்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ புதிய ஆராய்ச்சிச்‌ சிந்தனைகளுக்குப்‌ புத்துயிர்‌ வழங்கும்‌ விதமாக “முதலமைச்சரின்‌ ஆராயச்சித்‌ திட்டம்‌' அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ளது. இந்தத்‌ திட்டத்திற்கென தமிழ்நாடு அரசால்‌ ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்‌
ஒதுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின்‌ வரலாறு, எதிர்கால இலக்கு, பொருளாதார வளர்ச்சி, தொழில்சார்‌ சிந்தனைகளுக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசு தனித்துவமான “மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை”' வடிவமைப்பதில்‌ தீவிரமாகச்‌ செயலாற்றி வருகிறது.


“தமிழ்நாடு முதலமைச்சரின்‌ புத்தாய்வுத்‌ திட்டம்‌ என்ற புதிய சீர்மிகு திட்டத்தையும்‌ அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும்‌ கல்வி அடிப்படையில்‌ இரண்டு ஆண்டு காலம்‌ ஊக்க ஊதியத்துடன்‌ பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது’’. 


இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.