அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 


தமிழகத்தில் உள்ள164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் மொத்தம் 1,07,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.


முன்னதாக விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க இன்று (மே 19) கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து சேர்க்கை கலந்தாய்வு மே 25 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.


தனித்தனி தரவரிசைப் பட்டியல்


மாணவர் சேர்க்கைக்கு தமிழ் வழிப் பட்டப்படிப்புகளுக்கு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


கால அவகாசம் நீட்டிப்பு


இதுகுறித்து அமைச்சர் பொன்முடி கூறும்போது, ’’அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் மற்றும் பட்டயத் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு நாளை (மே 20) முதல் விண்ணப்பிக்கலாம். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நேற்று (மே 18) வரை 2,58,627 விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. சனி, ஞாயிறு, திங்கிள் கிழமை வரை கல்லூரிகளுக்குச் சென்றும் இணைய வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.


சனி, ஞாயிறுகளிலும் கல்லூரிகள் திறந்திருக்கும். எல்லாக் கல்லூரிகளிலும் ஒரே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு ரூ.200 விண்ணப்பக் கட்டணத்தை மட்டுமே கல்லூரிகள் வசூலிக்க வேண்டும்.


நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. அதேபோல சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. மாநிலக் கல்வி வாரிய முடிவுகளும் வெளியாகி விட்டதால், முன்கூட்டியே பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ளது’’ என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


எப்படி விண்ணப்பிப்பது என்று முழுமையாக அறிந்துகொள்ள: https://static.tneaonline.org/docs/arts/english_instruction.pdf?t=1684479144557 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


வீடியோ வடிவில் விண்ணப்பப் பதிவு குறித்து தெரிந்துகொள்ள: https://www.youtube.com/watch?v=RYFz1CMx434&feature=youtu.be


தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் முழு பட்டியலைக் காண: https://static.tneaonline.org/docs/arts/college_list.pdf?t=1684479144557


கூடுதல் விவரங்களுக்கு: tngasa2023@gmail.com
தொலைபேசி எண்கள்: 044- 28271911
044-28260098