பொறியியல் 2 கட்டக் கலந்தாய்வுகள் முடிந்துள்ள நிலையில், 37 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட சேராத அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழ்நாடு முழுவதும் 440 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கலந்தாய்வு இயக்ககம் நடத்தி வருகிறது.  


முதற்கட்டமாக 1,78,959 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில், கலந்தாய்வு தொடங்கியது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் 1,57,378 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 3,100 இடங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. 11,804 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து படித்து, பொறியியல் கலந்தாய்வில் இடம்பெற உள்ளனர்.  அங்கீகாரம் பெற்ற 430 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்த உள்ளன. 


சிறப்புப் பிரிவுக்கு 1, பொதுப் பிரிவுக்கு 2 என மொத்தம் 3 கட்டங்களாகக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலி இடங்கள் இருந்தால், அவற்றை நிரப்பக் கூடுதலாக ஒரு கலந்தாய்வு நடத்தப்படவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே 2 கட்டக் கலந்தாய்வுகள் அண்மையில் நடைபெற்று முடிந்தன. இந்த நிலையில்,  37 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை. அதேபோல 208 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. 


176.99 முதல் 142 மதிப்பெண்கள் வரை பெற்ற 64,286 மாணவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்துகொண்டனர். இதில், 35,474 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. இரண்டு கட்ட கலந்தாய்வையும் சேர்த்து, 50,615 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். 


28ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்


இரண்டு கட்டக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 3ஆம் கட்டக் கலந்தாய்வு கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இதற்கான சாய்ஸ் ஃபில்லிங் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் 28ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டியது அவசியம் ஆகும். அவர்கள் கட்டிய கட்டணம் மற்றும் டிஎஃப்சி மையங்களில் சமர்ப்பித்த சான்றிதழ்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்று பொறியியல் கலந்தாய்வு சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது. 


சிறப்பான உள்கட்டமைப்பு, நவீன கற்றல் வசதிகள், தொழிலக உரையாடல் கொண்ட 41 பொறியியல் கல்லூரிகளில், முதல் இரண்டு கட்டக் கலந்தாய்வில் 80 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. இந்த கல்லூரிகளில் கோர் படிப்புகள் எனப்படும் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல்  படிப்புகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளனர். 


அதிகம் விரும்பப்படும் படிப்புகள்


கலந்தாய்வு முடிவுகளைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு கணினி அறிவியல் மற்றும் அது சார்ந்த படிப்புகள் மாணவர்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளன. 


இதற்கிடையே அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடைபெறாத பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கலந்தாய்வு முழுமையாக முடிந்தபிறகு, இந்த ஆண்டு 10 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை நடைபெற்ற கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.


இந்த கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்து சிறப்புக் குழு ஆய்வு செய்யும். குறைவான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்ட கல்லூரிகள் மீது, அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல் ராஜ் தெரிவித்துள்ளார்.