தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி மாவட்ட நீதிமன்ற அலுவலக பழைய கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழைய நீதிமன்ற கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் ஆய்வு செய்தார்.


தஞ்சாவூரில் ஜில்லா நீதிமன்றம் 1806- ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த ஜில்லா நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக 1807 -ஆம் ஆண்டு சாா்லஸ் உட் கோக் பொறுப்பேற்றாா். தற்போதுள்ள மாவட்ட நீதிமன்றக் கட்டடம் 1870- ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதைத்தொடா்ந்து, ஜில்லா நீதிமன்றம் என்பது 1873- ஆம் ஆண்டில் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டது. பின்னா், இந்த நீதிமன்றம் 1884- ஆம் ஆண்டில் மாவட்ட நீதிமன்றமாக மாறியது. 


இந்நிலையில் தஞ்சாவூா் ராஜராஜன் மணிமண்டபம் அருகில் ரூ.39.56 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் கடந்த 2020 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் 13.13 ஏக்கா் பரப்பளவு கொண்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் மூன்று அடுக்குகள் கொண்டது.


மொத்தம் 1,55,916 சதுர அடிப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில் 18 நீதிமன்ற அறைகள், கணினி அறைகள், காணொலிக் காட்சி அறைகள், வழக்குரைஞா்களுக்கான அறைகள் உள்ளிட்ட அறைகள் உள்ளன. தற்போது பழைய நீதிமன்றம் பயன்பாடு இல்லாமல் உள்ளது.  எனவே பழைய நீதிமன்ற வளாகத்தை புதுப்பிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.


தொடர்ந்து தமிழில் பெயர் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்கள், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குப் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021ம் ஆண்டு தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கையின்போது தொழில் துறை அமைச்சர்  அறிவிப்பினை வெளியிட்டார். அதில் வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச் சீட்டுகள் தமிழில் அச்சிட்டு வழங்கப்படவும், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குத் தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படவும் வழிமுறைகள் உருவாக்கப்படும்.


இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பட்டிகள், பற்றுச்சீட்டுகள், விலைப்புள்ளிகள், இரப்பர் முத்திரைகள் ஆகியவற்றைத் தமிழில் அச்சிட்டு பயன்படுத்தியும், நிறுவனப்பெயர்ப்பலகைகளைத் தமிழில் அமைத்தும் உள்ள 3 வணிக நிறுவனங்களை (Business Firms) தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூலமாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசுகள் வழங்கப்பெறும். தகுதியுடைய வணிக நிறுவனத்தினர் இதற்கான படிவத்தினை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ளலாம். 


மேலும் தமிழில் பெயர் சூட்டியுள்ள குடியிருப்பு அடுக்ககங்கள் (Residential Apartments), வணிக வளாகங்கள் (Shopping Complex) ஆகியவற்றில் 3 குடியிருப்பு அடுக்ககங்கள். 3 வணிக வளாகங்கள் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் உயர் அலுவலர்கள் மூலமாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசுகள் வழங்கப்பெறும். இதற்கான படிவம் மற்றும் விதிமுறைகளை உள்ளாட்சி உயர் அலுவலகம் (மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகம், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம்) பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (04362– 271530) தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம் என்று கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.