Just In





TN 12th Exam 2025: மார்ச் 3-ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்; தயார் நிலையில் பள்ளிகள்- அட்டவணை இதோ!
Tamil Nadu 12th Exam 2025: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 3) தொடங்குகிறது. இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்கும் நிலையில், 8.21 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 3) தொடங்குகிறது. இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வு மையங்கள் தயார் படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 3,316 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முறைகேடுகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
முறைகேடுகளைத் தடுக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. குறிப்பாக 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள்
மேலும் மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையில் பொதுத்தேர்வைக் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆயுதம் தாங்கிய காவல் அதிகாரிகள் பாதுகாப்புப் பணி
மாநிலம் முழுவதும் அனைத்துப் பொதுத்தேர்வுகளுக்காகவும் அமைக்கப்பட்டு உள்ள 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வுகள் முடிந்த பிறகு விடைத்தாள் திருத்துதல் பணிக்காக தமிழகம் முழுவதும் 150 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
பிளஸ் 2 தேர்வு அட்டவணை என்ன?
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3ஆம் தேதி தமிழ் மொழிப் பாடத்துடன் தேர்வு தொடங்குகிறது. மார்ச் 25ஆம் தேதியோடு தேர்வு முடிகிறது. இயற்பியல் மற்றும் பொருளாதாரம் தேர்வுகள் அந்தத் தேதியில் நடைபெறுகின்றன.
கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in