பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 3,302 தேர்வு மையங்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக மாநிலக் கல்வி வாரியத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
3,302 தேர்வு மையங்கள்
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக 3,302 தேர்வு மையங்களும், 10-ம் வகுப்புக்காக 4,107 மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காகவும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்வில் முறைகேடுகள் எதுவும் இல்லாமல், முறையாக நடைபெற ஏதுவாக பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தேர்வுத் துறை ஈடுபட்டு வருகிறது. தேர்வுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மார்ச் 22ஆம் தேதி பொதுத் தேர்வு
குறிப்பாக மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி மற்றும் அடுத்தடுத்த தேதிகளில் பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வை 7.15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
குறிப்பாக தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை மின்னியல் பொறியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
தொடர்ந்து மார்ச் 11ஆம் தேதி வேதியியல், கணக்கியல், நிலவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல மார்ச் 15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாட வாரியாகத் தேர்வுகள்
கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) ஆகிய பாடத்தின் பொதுத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன.
மார்ச் 22-ல் என்னென்ன தேர்வுகள்?
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை மெக்கானிக்கல் பொறியியல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.