12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் பாடங்கள் வாரியாக எத்தனை பேர் முழு மதிப்பெண்கள் பெற்றார்கள் என்ற விவரத்தை காணலாம். 


12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு 


நடப்பாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகளும், புதுச்சேரியில்  14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். இதற்காக  3 ஆயிரத்து 225 மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவ, மாணவியர்களின் உயர்கல்வியை நிர்ணயிக்க செய்வதில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மிக முக்கிய பங்குகளை வகிப்பதால் அனைவரும் ஆர்வமுடன் தேர்வுகளை எழுதியிருந்தனர். 


தேர்வுகள் முடிந்த நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு விடைத்தாள்கள்  அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்ரல் 11 ஆம் தேதியில் இருந்து 21ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 79 முகாம்கள் அமைக்கப்பட்டு  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு திட்டமிட்டபடி மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தது. 


நீட் தேர்வால் மாற்றப்பட்ட ரிசல்ட் தேதி 


இந்த நிலையில் நேற்று  (மே 7ஆம் தேதி) இளநிலை  மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இதனை பல லட்சம் மாணவர்கள் எழுதினர். நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் மனநிலையை முன்னதாக வெளியாகும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கலாம் என்பதால் பெற்றோர்களும், ஆசிரியர் சங்கங்களும் ரிசல்ட்  தேதியை மாற்றக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து மே 5 ஆம் தேதிக்கு பதிலாக மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். இதனால் மாணவ, மாணவிகள் நிம்மதியடைந்தனர். 


வெளியானது தேர்வு முடிவுகள் 


அதன்படி மே 8 ஆம் தேதியான இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவ, மாணவிகள்  தேர்வு முடிவுகளை www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ,  www.dge.tn.gov.in , www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வழியாகத் தெரிந்து கொள்ள என கூறப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் வழக்கம்போல மாணவர்களை விட, மாணவிகளே இந்தாண்டும் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


சதமடித்த மாணவ, மாணவிகள் 



  • தமிழ் - 2  

  • ஆங்கிலம் - 15  

  • இயற்பியல் - 812  

  • வேதியியல்  - 3, 909  

  • உயிரியல் - 1,494  

  • கணிதம் - 690  

  • தாவிரவியல் - 340   

  • விலங்கியல் - 154

  • கணினி அறிவியல் - 4,618

  • வணிகவியல் - 5,578

  • கணக்குப் பதிவியல் - 6,573

  • பொருளியல் - 1,760

  • கணினிப் பயன்பாடுகள் - 4,051

  • வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் - 1,334