10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை இன்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
 
தேர்வர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். 


10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தேர்வு தொடங்கி, ஜூலை 4ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றன. குறிப்பாக ஜூன் 27ஆம் தேதி மொழித் தாளும் 28ஆம் தேதி ஆங்கிலப் பாடமும் நடைபெற்றது. ஜூன் 30ஆம் தேதி கணிதப் பாடமும் ஜூலை 1ஆம் தேதி விருப்ப மொழித் தாளுக்கும் ஜூலை 3ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கும் துணைத் தேர்வுகள் நடைபெற்றன. ஜூலை 4ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கும் தேர்வுகள் நடைபெற்றன. 


இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 26) வெளியாகி உள்ளன. பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள்‌ (தட்கல்‌ தனித் தேர்வர்கள்‌ உட்பட) தேர்வு முடிவினை, இன்று ( புதன்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ இணையதளத்தில் இருந்து தங்களது தேர்வெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியைப் பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களாகவே பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்.




இணையதளத்தில்‌ பத்தாம்‌ வகுப்பு தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களை பதிவிறக்கம்‌ செய்வதற்கான வழிமுறைகள்‌ :


தேர்வர்கள்‌ வருகிற 26.07.2023 ( புதன்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ தமது மதிப்பெண்‌ சான்றிதழை www.dge.tn.gov.in என்ற முகவரிக்குள்‌ சென்று NOTIFICATION பகுதியில்‌ SSLC Examination என்ற வாசகத்தை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்‌ தோன்றும்‌ பக்கத்தில்‌ "SSLC SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2023 PROVISIONAL MARK SHEET DOWNLOAD" என்ற வாசகத்தை க்ளிக் செய்ய வேண்டும்ம். 


அதில்,  தேர்வர்கள்‌ தங்களது தேர்வு எண்‌ (Registration Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை பதிவு செய்து, தங்களது மதிப்பெண்‌ சான்றிதழை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என அறிவிக்கப்படுகிறது.


மறு கூட்டல் எப்படி?


ஜூன்‌/ ஜூலை 2023-ல் நடைபெற்ற பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வுக்கான மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தனித் தேர்வர்கள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்திற்கு 01.08.2023 (செவ்வாய்க் கிழமை) மற்றும்‌ 02.08.2023 ( புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.00 மணி வரை நேரில்‌ சென்று உரிய கட்டணம்‌ செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்‌.


புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில்‌ (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர்‌ அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள்‌ பதிவு செய்துகொள்ளலாம்‌ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.