பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதம் முன்னதாக ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 


பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்குவதாகவும். 5ஆம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வுக்குப் பிறகு, பொதுப் பிரிவினருக்கு 7ஆம் தேதி தொடங்கும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது. இந்தக் கலந்தாய்வு செப்டம்பர் 24 வரை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தத் தேதி மாற்றப்பட்டுள்ளது.


இதன்படி ஜூலை 2 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


’’நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. அதேபோல சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. மாநிலக் கல்வி வாரிய முடிவுகளும் வெளியாகி விட்டதால், முன்கூட்டியே பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 


கால அவகாசம் நீட்டிப்பு


பாலிடெக்னிக் மற்றும் பட்டயத் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு நாளை (மே 20) முதல் விண்ணப்பிக்கலாம். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நேற்று (மே 18) வரை 2,58,627 விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. சனி, ஞாயிறு, திங்கிள் கிழமை வரை கல்லூரிகளுக்குச் சென்றும் இணைய வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.


சனி, ஞாயிறுகளிலும் கல்லூரிகள் திறந்திருக்கும். எல்லாக் கல்லூரிகளிலும் ஒரே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு ரூ.200 விண்ணப்பக் கட்டணத்தை மட்டுமே கல்லூரிகள் வசூலிக்க வேண்டும்’’. 


இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


இதற்கென மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். 


மே 5 முதல் விண்ணப்பப் பதிவு


முதலாம் ஆண்டு பி.இ./ பி.டெக். / பி.ஆர்க்.‌ பட்டப் படிப்பிற்கு மே 5ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாகத் தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு, அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகள்‌, அண்ணா பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அதன்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. 


விண்ணப்ப பதிவுக்‌ கட்டணம்‌


பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்‌ டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம்‌. இணையதள வாயிலாக பதிவுக்‌ கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள்‌, " “The Secretary TNEA” payable at Chennai.. என்ற பெயரில்‌ இன்று முதல் வரைவோலையை பதிவுக்‌ கட்டணமாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌ (TFCs) வாயிலாக மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்‌.


கட்டணம்- ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி- ரூ.500
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி- ரூ.250. 


கூடுதல் விவரங்களுக்கு:


தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110


இ- மெயில் முகவரி: tneacare@gmail.com