பார்வைத் திறன் குறைபாடு உள்ள மாணவன், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். அதிக மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:
காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 8.18 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளில் தமிழ்நாடு முழுவதும் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக மாணவர்கள் 88.58 சதவீதம் (3,96,152) பேரும் மாணவிகள் 94.53 சதவீதம் (4,22,591) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு முடிவுகள் என்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 87.55 % சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் தற்போது 32 இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் காஞ்சிபுரம் மாவட்ட தேர்ச்சி தற்போது 2.37 % வீழ்ச்சி அடைந்துள்ளது.
8013 மாணவர்களும், 7772 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 785 பேர் தேர்வு எழுதினர். இதில் 6655 மாணவர்களும், 7164 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 819 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 83.05%, மாணவிகள் 92.18% தேர்ச்சி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை நூறு அரசு பள்ளிகளில் இருந்து 4127 மாணவர்களும், 4769 மாணவிகளும் மொத்தம் 8 ஆயிரத்து 896 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்.
இதில் 3187 மாணவர்களும் மற்றும் 4253 மாணவிகளும் சேர்த்து 7,440 மாணவ மாணவிகள் அரசு பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 89.18 ஆகவும் மாணவர்களின் பேச்சு சதவீதம் 77.72 ஆகவும் உள்ளது. அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தத் தேர்ச்சி சதவீதம் 83.63 ஆக உள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் 33வது இடத்தை தான் பிடித்துள்ளது.
சாதனை படைத்த மாணவர்
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லப்பன் நகர் பகுதியில் வசிப்பவர்கள் வாசுதேவன் - சரிதா தம்பதியினர். வாசுதேவன் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் மதன், 80% சதவிகிதம் பார்வை திறன் மாற்றுத்திறனாளியாக உள்ளவராக உள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட ஆட்சியர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வருகிறார். பார்வை திறன் குறைபாடு உள்ள நிலையிலும் பள்ளி ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்போடும், பெற்றோரின் உதவியோடும், ஆர்வத்துடன் கல்வி பயின்று வந்தார்.
பேராசிரியர் இலட்சியம்
இந்தநிலையில் தற்போது நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று தமிழில் 87, ஆங்கிலத்தில் 97, கணிதத்தில் 100, அறிவியல் 96, சமூக அறிவியலில் 97 என மொத்தம் 477 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவனர சாதனை படைத்துள்ளார். பார்வை திறன் குறைபாடு உள்ள மாணவன் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ள சம்பவம் குறித்து அறிந்து அப்பகுதி மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மாணவனுக்கும், மாணவனுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஒத்துழைப்புடன் தான் படித்து வந்ததாகவும் தான் படித்து பேராசிரியராக ஆக வேண்டும் என்பது தன்னுடைய லட்சியம் எனவும் மாணவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.