Uyir Thamizhukku Movie Review: மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள “உயிர் தமிழுக்கு” (Uyir Thamizhukku) படத்தில் இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு என பலரும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்த உயிர் தமிழுக்கு படம் இன்று (மே 10) தியேட்டர்களில் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் விமர்சனத்தைக் காணலாம்.


படத்தின் கதை


உயிர் தமிழுக்கு என டைட்டில் பார்த்ததும் ஹீரோ தமிழ் மொழிக்காக உயிரை கொடுப்பதாக நினைக்க வேண்டாம். அதேபோல் இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் கண்டு தீப்பொறி பறக்க அரசியல் ஆக்‌ஷன் படம் என எண்ண வேண்டாம். இந்த படத்தில் ஹீரோயின் சாந்தினி ஸ்ரீதரன் பெயர் “தமிழ் செல்வி” அவ்வளவு தான்.  எதற்காக “உயிர் தமிழுக்கு” என பெயர் வைத்தார்கள் என்று இப்போது புரிந்திருக்குமே! (முதலில் இப்படத்துக்கு வைத்த பெயர் “நாற்காலி” என்பது குறிப்பிட வேண்டிய தகவல்).




கதை என்னவென்று பார்த்தால், சென்னையில் ஒருநாள் அதிகாலையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவரின் மகளான சாந்தினியை காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் அமீர் தான் இந்த கொலையை செய்தார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சாந்தினியும் நம்பி அமீரை வெறுக்கிறார். இறுதியாக அமீர் தன் மீதான கொலைப்பழியை நீக்கி சாந்தினியோடு எப்படி சேர்ந்தார் என்பதே இப்படத்தின் கதையாகும். 


காதல் கலந்த அரசியல் 


சினிமாவில் லாஜிக் பார்த்தால் எதுவும் எடுபடாது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் இயக்குநர் ஆதம்பாவா. கேபிள் டிவி நடத்தும் பாண்டியன் (அமீர்), தமிழ் செல்வி (சாந்தினி) மீது ஏற்படும் காதலால் அரசியலுக்குள் வருகிறார். காதலிக்காக அரசியல் செய்வது மட்டுமல்லாமல் அவருக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என அனைத்தையும் நடத்துகிறார். ஹீரோயின் சாந்தினி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழுக்கு மீண்டும் வந்துள்ளார். முதல் பாதி காதல் காட்சிகளில் அழகாக நடித்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதியில் சுத்தமாக நடிப்பு வரவில்லை. இவர்களை தவிர்த்து ஆனந்தராஜ், ராஜ் கபூர், இமான் அண்ணாச்சி ஆகியோர் பேசும் வசனங்கள் ஆங்காங்கே  சிரிப்பை வரவழைக்கிறது. 



பிளஸ், மைனஸ் என்ன? 


உயிர் தமிழுக்கு படம் கிட்டதட்ட 5 வருடங்களாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தை வி.இசட்.துரை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் நடுவில் விலகியதால் தயாரிப்பாளர் ஆதம்பாவா படத்தை இயக்கியுள்ளார். இடைவெளி விட்டு விட்டு எடுக்கப்பட்டது படத்தில் அழகாக தெரிகிறது. அதனை கதையில் மேட்ச் செய்ய முயற்சித்துள்ளார்கள். ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி அதனை ஏமாற்றும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.


அதேபோல் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகள். குறிப்பாக வாக்கு எண்ணிக்கை தொடர்பான காட்சிகளெல்லாம் சரியாக விசாரித்து வைத்திருந்திருக்கலாம். 




படத்தின் ஒரே பிளஸ் சமகால அரசியலை பகடி செய்திருப்பது தான். சமாதி முன் தியானம், மத்திய அரசின் தயவில் 4 ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றியது, மெரினா பீச்சில் அரசுடமையாக்கப்பட்ட தலைவர்கள் சமாதி, இவிஎம் மிஷினால் ஆட்சி செய்யலாம் என நினைப்பது, ஆன்மீக அரசியல், நடிகர்களின் அரசியல் வருகை ஆகியவை தொடர்பான வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது. இசையமைப்பாளர் வித்யாசாகர் கம்பேக் கொடுத்திருந்தாலும் அவரின் பழைய பாணி வேண்டும் என்றே தோன்ற வைக்கிறது. 


இப்படத்தை பொறுமையாக, வித்தியாசமான அரசியல் படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் தாராளமாக தியேட்டர்களில் சென்று பார்க்கலாம்!