10th Result 2024: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதில்  மாணவ, மாணவிகள் மதிப்பெண்கள் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட விவரங்களை காணலாம்.


10 ஆம் வகுப்பு தேர்வு 


மேல்நிலைக்கல்விக்கு அடியெடுத்து வைப்பதை நிர்ணயிக்கும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வுகளை 4,47,203 மாணவர்களும், 44,47,061 மாணவிகளும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8,94,264 பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வுகள் 4, 107 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 


ஏப்ரல் 12 முதல் 22 ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று திட்டமிட்டபடி காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in  ஆகிய இணையதளங்களின் மூலமாக மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் தேர்வு எழுதியவர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாணவர்கள் vs மாணவிகள் 


தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.58%, மாணவிகள் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர்.


4,47,061 மாணவிகள், 4,47,203 மாணவர்கள் என  மொத்தம் 8,94,264 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,18,743 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,96,152 பேரும், மாணவிகள் 4,22,591 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மாணவர்களை விட மாணவியர்கள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்ற நிலையில் நடப்பாண்டில் 5.95% ஆக உள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதேசமயம் 13,510 மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதிய நிலையில், 12,491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் 260 சிறைவாசிகள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.