10th Result School Wise: திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விகிதம் குறித்து காணலாம்.
வெளியான தேர்வு முடிவுகள்
பொதுவாக தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வு விவரம்
கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி மொழித்தாள் பாடத்துடன் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியது. ஏப்ரல் 10ஆம் தேதி ஆங்கிலமும், 13ஆம் தேதி கணிதமும், 15 ஆம் தேதி விருப்ப மொழித்தாளும், 17 ஆம் தேதி அறிவியலும், 20 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளும் நடைபெற்றது. நடப்பாண்டு 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 மாணவ, மாணவிகள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியிருந்தனர். இதற்கிடையே ஏப்ரல் 25 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி மே 3ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் விறுவிறுப்பாக நடந்தது.
முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?
மாணவ, மாணவிகள் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணைய தளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12, 638 ஆகும். இதில் 7,502 மேல்நிலைப்பள்ளிகளும், 5,136 உயர்நிலைப்பள்ளிகளும் அடங்கும். 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718 ஆகும். இதில் 1,026 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
சாதனைப் படைத்த பள்ளிகள்
அரசுப் பள்ளிகள் - 87.45%
அரசு உதவி பெறும் பள்ளிகள் - 92.24%
தனியார் சுய நிதி பள்ளிகள் - 97.38%
பெண்கள் பள்ளிகள் - 94.38%
ஆண்கள் பள்ளிகள் - 83.25%