Tamil Nadu 10th Result 2023: மாணவ, மாணவியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இதில் மாணவ,மாணவிகளில் யார் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை காணலாம்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
நடப்பாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9,14, 320 மாணவர்கள் எழுதினர். இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கியது. மே 3 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பணியை சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் மேற்கொண்டனர். இதற்காக 83 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.
மாற்றப்பட்ட ரிசல்ட் தேதி
விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டு முதலில் மே 17 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் மே 19 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. முன்னதாக மே 5 ஆம் தேதி வெளியாகவிருந்த 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் நீட் தேர்வு காரணமாக 8 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருந்தது.
வெளியான தேர்வு முடிவுகள்
இப்படியான நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு காணலாம்.
அதேசமயம் மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதம்
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.64% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
4,55, 017 மாணவிகள், 4,59,303 மாணவர்கள் என மொத்தம் 9,14, 320 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,35, 614 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,04, 904 பேரும், மாணவிகள் 4,30,710 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை விட மாணவியர்கள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் 10,808 மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதிய நிலையில், 9,703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் 264 சிறைவாசிகள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.