பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் இன்று (பிப். 20) முதல் திருத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர். 


பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின்‌ பெயர் ப்பட்டியல்‌ தயாரிக்கும்‌ பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கும்‌ 14.12.2022 முதல்‌ 23.12.2022 வரையிலான நாட்களில்‌ தங்களது பள்ளியில்‌ பத்தாம்‌ வகுப்பு பயிலும்‌ அனைத்து மாணவர்களது விவரங்களையும்‌ இணையதளம்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ செய்து, தேர்வுக்‌ கட்டணத்தினையும்‌ இணையதளம்‌ வாயிலாக செலுத்த வேண்டும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டது. 


அதன்‌ பின்னர்‌, மேற்குறிப்பிட்ட பணிக்கான கால அளவு 28.12.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. பின்பு மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ தங்களது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களும்‌ 17.02.2023 பிற்பகல்‌ முதல்‌ பெயர்ப் பட்டியலை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 


இதுகுறித்த அறிவுறுத்தல் அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும் அனைத்து அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரிசெய்து கொள்ள தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இன்று (பிப்ரவரி 20) முதல் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் எமிஸ் தளம் வழியாக பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.


இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.  


தேர்வு எப்போது?


தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் சார்பில் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர். 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்கு தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.


10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu


ஏப்ரல்  6 - தமிழ் (மொழித்தாள்)
ஏப்ரல் 10 - ஆங்கிலம் 
ஏப்ரல் 13-  கணிதம்


ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்
ஏப்ரல் 17- அறிவியல்
ஏப்ரல் 20- சமூக அறிவியல் 


10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.