10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஆகஸ்ட் 29ஆம் தேதி) முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
மாநிலக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினர். இந்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டன.
அவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள் மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். அதாவது மொத்தம் 91.55% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். கடந்த ஆண்டை காட்டிலும், இந்த முறை 0.16% கூடுதலாக தேர்ச்சி விகிதம் பதிவாகி இருந்தது.
மே மாதம் வழங்கப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
இதற்கிடையே மாணவர்கள் 13.05.2024 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றனர். மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவண் ஆகிய விவரங்களை அளித்து, இணைய தளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல், மறு மதிப்பீடு நடந்தது. அதற்குப் பிறகு மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கும், பிற மாணவர்களுக்கும் இன்று (ஆகஸ்ட் 29ஆம் தேதி) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பெறுவது எப்படி?
மாணவர்கள், அந்தந்தப் பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம். தலைமை ஆசிரியர்கள் மூலம் இந்த சான்றிதழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தனித் தேர்வர்களுக்கு என்ன நடைமுறை?
அதேபோல தனித் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெறலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/