பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநிலத்தில் 97.22 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் முடிவுகள் வெளியானது. இதையடுத்து மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவுகளை பார்ப்பதற்காக குவிந்திருந்தனர்.பல மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டனர். 10ஆம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் குமரி மாவட்டத்தில் 11405 மாணவர்களும் 11 ஆயிரத்து 580 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 985 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 10893 மாணவர்களும் 11 ஆயிரத்து 452 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 345 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 95.51 சதவீதம் பேரும் மாணவிகள் 98.89 சதவீதம் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். சராசரியாக 97.21 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகமானோர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.



 

தேர்ச்சி விழுக்காட்டை பொறுத்தமட்டில் 10ஆம் வகுப்பு தேர்வில் குமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே கடந்த2019-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் மாநில அளவில் 10ஆம் வகுப்பு தேர்வில் குமரி மாவட்டம் 98.08 சதவீதம் பெற்று 2-வது இடம் பிடித்து இருந்த நிலையில் தற்போது முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது. கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நடைபெறவில்லை.

 

குமரி மாவட்டம் ஏற்கனவே மாநில அளவில் கல்வி அறிவு நிறைந்த மாவட்டம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மாநில அளவில் சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த பள்ளி ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். கடந்த 2019-ம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கிடைக்கப் பெற்ற தேர்ச்சி விழுக்காட்டை விட இந்த கல்வியாணடில் தேர்ச்சி விழுக்காடு குறைந்து இருந்தாலும் மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



 

கடந்த 2012 ஆம் கல்வி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் முதல் இடம் பிடித்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.