தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், முதல் தேர்வான தமிழ்ப் பாடம் எப்படி இருந்தது என்று மாணவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


கொரோனா பெருந்தொற்று, அதைத் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக 2020, 21ஆம் ஆண்டுகளில் பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன, கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் தாமதமாக மே மாதத்தில் நடத்தப்பட்டன. இந்தக் கல்வியாண்டில் நிலைமை சரியாகி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இன்று (ஏப்ரல் 6) பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்றது. முதல் நாளான இன்று, தமிழ் மொழிப் பாடத் தேர்வு மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது.  


தேர்வுக்கு முன்னதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சேப்பாக்கம் லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள தேர்வு மையத்தை பார்வையிட்டு மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் கல்வி அறக்கட்டளை சார்பாக மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் அடங்கிய தொகுப்பையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.


செய்முறைத் தேர்வுக்குக் கால அவகாசம் நீட்டிப்பு


முன்னதாக 10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கலந்துகொள்ளாத நிலையில், அவர்கள் தேர்வை எழுதுவதற்காக மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம், நீட்டிப்பு செய்யப்பட்டது. அதேபோல 12ஆம் வகுப்பு மொழிப் பாடத் தேர்வுகள் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடத் தேர்வுகளை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதுபோன்ற ஆப்சென்ட் நிகழ்வுகள் 10ஆம் வகுப்பில் ஏற்படாமல் இருக்கப் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 


இந்த நிலையில், முதல் பாடமாக தமிழ் தேர்வு இன்று நடைபெற்று முடிந்தது. தேர்வு எப்படி என்று மாணவர்கள் சிலர் ABP Nadu-விடம் பேசினர். 


நிதேஷ் சாய் சுந்தரம், சென்னை மாணவர்


தமிழ் மொழித் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருமே சிறப்பாக எழுதும் வகையில் கேள்விகள் இருந்தன. புத்தகத்துக்குப் பின்பு கொடுக்கப்பட்டிருக்கப்படும் பயிற்சியில் இருந்தே பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பாடத்தில் உள்ளே இருந்து கேள்விகள் அதிகம் கேட்கப்படவில்லை. 


எனக்கு 92 அல்லது 93 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அனைத்து மாணவர்களுமே குறைந்தபட்சம், 70 மதிப்பெண்கள் வாங்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.


கல்பா, மதுரை மாணவி


இலக்கணம் பிடிக்கும் என்பதால், ஆர்வத்துடன் தேர்வை எழுதினேன். தேர்வு நேரத்துக்கு முன்பாகவே கேள்விகளுக்கு விடை அளித்து, முடித்துவிட்டேன். மொத்தத்தில் எனக்குத் தமிழ் பாடம் எளிமையாக இருந்தது. 


ஸ்ரீனேஷ், திருச்சி மாணவர்


சராசரி மாணவனான எனக்கு தமிழ் தேர்வு ஓரளவு எளிதாக இருந்தது. 40ஆவது கேள்விக்கு, ஓவியம் பார்த்துக் கவிதை எழுதினேன். 45ஆவது கேள்வியாக கொரோனா பெருந்தொற்று குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வுச் செயல்பாடுகள், கடமைகள் பற்றியும் கேட்டிருந்தது சம காலத்துடன் பொருத்திக் கொள்வதாக அமைந்தது. 


இவ்வாறு மாணவர்கள் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு குறித்துத் தெரிவித்தனர்.