மாநிலம் முழுவதும் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் வெளியிட்டார். 


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன.


இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதனிடையே 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. 


இதன்படி, நாளை (ஜூன் 20ஆம் தேதி) காலை 10 மணிக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 93.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 



நண்பகல் 12 மணிக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 2018, 2019, 20, 21 மற்றும் 2022 தேர்ச்சி விகிதப் புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன? பார்க்கலாம்.


முன்னதாக 2021ஆம் ஆண்டு கொரோனா காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முந்தைய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக 10ஆம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 50 சதவீத மதிப்பெண்களும், 11ஆம் வகுப்பு மதிப்பெண்களில் இருந்து 20 சதவீத மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் இருந்து 30 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்பட்டு மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது.


இந்நிலையில், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம். இதன்படி, 10ஆம் வகுப்புத் தேர்வில் 2018ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விகிதம் 94.5 ஆக இருந்தது. இது 2019ஆம் ஆண்டில், 95.2 ஆக அதிகரித்தது. 2020 மற்றும் 2021ஆம் கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக, 100 சதவீதத் தேர்ச்சி வழங்கப்பட்டது. 


அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்வில், இப்போது 2022ஆம் ஆண்டில்  90.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. 






12ஆம் வகுப்பு தேர்ச்சி விவரங்கள் சொல்வது என்ன?


12ஆம் வகுப்புத் தேர்வில் 2018ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விகிதம் 91.1 ஆக இருந்தது. இது 2019ஆம் ஆண்டில், 91.3 ஆக அதிகரித்தது. 2020 ஆண்டில் 92.3 ஆக தேர்ச்சி வீதம் மேலும் உயர்ந்தது. 2021ஆம் கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக, 100 சதவீதத் தேர்ச்சி வழங்கப்பட்டது. 




அதைத் தொடர்ந்து நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில், இப்போது 2022ஆம் ஆண்டில் 93.76 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண