அதேபோல 2023 - 24 கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கான சீர்மிகு பாராட்டு விழா சென்னையில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்துக்‌ கல்வித்‌ துறை கூறி உள்ளதாவது:


’’2023 – 2024ஆம் கல்வியாண்டிற்கான பத்து மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு அரசு பொதுத்தேர்வில்‌ 100 சதவீதம்‌ தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ உயர்‌ அலுவலர்களுக்கான சீர்மிகு பாராட்டு விழா சென்னையில்‌ நடைபெறுகிறது.


அரசுப்பள்ளிகள்‌ வறுமையின்‌ அடையாளம்‌ அல்ல; அது பெருமையின் அடையாளம்‌ என்பதை தொடர்ந்து பறைசாற்றும்‌ விதமாக நடப்புக்‌ கல்வியாண்டின்‌ பொதுத்‌ தேர்வு முடிவுகள்‌ எடுத்துக்காட்டு கின்றன.


397 அரசு மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ 100% தேர்ச்சி


மேல்நிலைத்‌ தேர்வில்‌ (150 42), 94.56 சதவீதம்‌ மாணவர்கள்‌ தேர்ச்சி பெற்றுள்ளனர்‌. அரசுப்பள்ளிகளில்‌ மட்டும்‌ 91.02 சதவீதம்‌ பேர்‌ தேர்ச்சியடைந்துள்ளனர்‌. குறிப்பாக 397 அரசு மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ இந்த ஆண்டு 100 சதவீதம்‌ தேர்ச்சி விழுக்காட்டை எட்டி சாதனைப்‌ படைத்துள்ளனர்‌. மேலும்‌, தமிழ்ப்‌ பாடத்தில்‌ 35 மாணவர்கள்‌ 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்‌.


இடைநிலைப்‌ பள்ளி பொதுத்தேர்வில்‌ (10ஆம் வகுப்பு 91.55 சதவீதம்‌ மாணவர்கள்‌ தேர்ச்சி பெற்றுள்ளனர்‌. இதில்‌ அரசுப்‌ பள்ளிகளின்‌ தேர்ச்சி சதவீதம்‌ 87.90 ஆகும்‌.


1364 அரசுப்‌ பள்ளிகள்‌ இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. தமிழ்‌ பாடத்தில்‌ மட்டும்‌ 100 சதவீத மதிப்பெண்‌ எடுத்த மாணவர்களின்‌ எண்ணிக்கை 8 ஆகும்‌. ஆக மொத்தம்‌ 12 மற்றும்‌ 10 ஆம்‌ வகுப்புகளில்‌ பள்ளிகள்‌ இவ்வாண்டு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இது ஒரு வரலாற்று சாதனையாகும்‌. பள்ளிக்‌ கல்வித்‌ துறை வாலாற்றில்‌ மேலும்‌ ஒரு‌ மைல்கல்‌ ஆகும்‌.


எனவே இப்பள்ளிகளின்‌ தலைமை ஆசிரியர்கள்‌ அனைவரையும்‌ பாராட்டும்‌ வண்ணம்‌ சென்னையில்‌ ஒரு சீர்ம்கு விழா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அவ்விழாவில்‌ தமிழ்ப்பாடத்தில்‌ 100 சதவீதம்‌ மதிப்பெண்‌ பெற்ற பத்து மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பில் 43 மாணவர்கள்‌ கவுரவிக்கப்பட உள்ளார்கள்‌.


 குறைந்த தேர்ச்சி விகிதம்‌ பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அழைப்பு


இப்பாராட்டு விழாவின்‌போது ஒவ்வொரு மாவட்டத்தில்‌ இருந்து குறைந்த தேர்ச்சி விகிதம்‌ பெற்ற தலைமை ஆசிரியர்கள்‌ அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகள்‌ வழங்கப்படும். அத்துடன்‌, 100 சதவீதம்‌ எட்டிய தலைமை ஆசிரியர்களுடன்‌ கலந்துரையாடல்‌ செய்து கருத்துகள்‌ பரிமாற்றம்‌ ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள்‌ மேலும்‌ அவர்களுக்கு ஒரு உத்வேகத்தை எற்படுத்தும்‌.


ஒவ்வோர்‌ ஆண்டும்‌ அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌தேர்ச்சி விகிதம்‌ 100 சதவீத இலக்கை எட்டவும்‌ வழிவகை செய்யும்‌ என பள்ளிக் கல்வித்துறை சார்பில்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.