சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் தேர்வு கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
2024 - 2025 -ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும்மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு, எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் கீழ்க்காணும் தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
- மாணாக்கரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
- பிறந்த தேதி
- புகைப்படம்
- பாலினம்
- வகைப்பாடு (சாதி அடிப்படையிலான வகைப்பாடு )
- மதம்
- மாணாக்கரின் பெற்றோர் / பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
- மாற்றுத் திறனாளி வகை மற்றும் சலுகைகள்
- கைபேசி எண்
- 10.பாடத் தொகுப்பு - Group code ( +1 மாணவர்களுக்கு மட்டும்)
- பயிற்று மொழி (Medium of instruction)
- 12.மாணாக்கரின் வீட்டு முகவரி
- பெற்றோரின் ஆண்டு வருமானம்
பள்ளி மாணவர்களின் மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பயன்படுத்தியே, 2024 - 2025ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதால், அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித்
தலைமை ஆசிரியர்களும், செப்.18 வரை எமிஸ் வலைத்தளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும்மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் அனைத்து மாணவர்களது மேற்குறிப்பிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதனையும், மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் பாடத்தொகுப்பு ஆகிய விவரங்கள் பின்வருமாறு உள்ளதா என்பதனையும் சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் உடன் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
எமிஸ் வலைத்தளத்தில் உள்ள மாணவரது பெயர் / பெற்றோரது பெயர் உள்ளிட்ட தமிழில் உள்ள விவரங்கள் அனைத்தும் UNICODE – Font-ல் மட்டுமே இருத்தல் வேண்டும். வேறு ஏதேனும் தமிழ் Font-ல்விவரங்கள் இருந்தால் அதனை முழுமையாக நீக்கம் செய்து விட்டு UNICODE Font- ல் மீண்டும் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
- மாணவரின் பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)
மாணவரது பெயர் பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறே இருத்தல்வேண்டும். பெயர் முதலிலும், அதனைத் தொடர்ந்து தலைப்பெழுத்தும் இடம்பெறும் வகையில் மாணவரது பெயர் இருக்க வேண்டும். மாணவரது பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும் போது தலைப்பெழுத்தும் தமிழில் இருக்க வேண்டும். உதாரணமாக, மாணவரது தந்தையின் பெயர் கண்ணன் எனில், தலைப்பெழுத்து க என இருக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அரசிதழின் நகலைப் பெற்று அதன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
- பிறந்த தேதி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினைப் பொறுத்தவரை, மாணவரின் பிறந்த தேதியினை பிறப்புச் சான்றிதழுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே பதிய வேண்டும். மாணவர்கள் தேர்வு நடைபெறும் மாதத்தின் முதல் நாளன்று கண்டிப்பாக 14 வயது நிறைவு செய்தவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு 14 வயதினை நிறைவு செய்யாதவர்களாக இருப்பின், மாணவர்களது வயது தளர்வு அரசாணையின்படி, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்/ முதன்மைக் கல்வி அலுவலரிடம் கண்டிப்பாக வயது தளர்விற்கான ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும்.
மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர், பிறந்த தேதி மாற்றம் கோருவோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
- புகைப்படம்
சம்பத்தில் எடுக்கப்பட்ட மாணவரது மார்பளவு புகைப்படத்தை (Passport size photo) மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படம் jpeg, jpg வடிவில் இருக்க வேண்டும்.
- மாணவரது பெற்றோர் / பாதுகாவலர் பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)
மாணவர்களது பெற்றோர் (தாய் மற்றும் தந்தை) / பாதுகாவலரது பெயர்களை, அவர்களது பள்ளி ஆவணங்கள் /ஆதார் அட்டையில் உள்ளவாறு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தவறில்லாமல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
- கைபேசி எண்
தேர்வு முடிவுகள் மாணாக்கரின் பெற்றோரது / பாதுகாவலரது கைபேசி எண்ணுக்கே குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்பதால், பதிவேற்றம் செய்யப்படும் கைபேசி எண் சரியானதாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
குறிப்பு :
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் அனைத்து தேர்வர்களும் பகுதி – 1ல் தமிழ் மொழியை மட்டுமே மொழிப்பாடமாக தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
பின்னணி என்ன?
கடந்த 2006- 07ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் படிப்படியாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். இந்த சட்டப்படி, 2006-ம் ஆண்டு 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பகுதி -1 ல் தமிழ் மொழிப்பாடத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.
கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் மொழி வழி சிறுபான்மை பேரவையினரின் கோரிக்கையை ஏற்று, தேர்வு எழுத உள்ள தமிழ் அல்லாத சிறுபான்மை மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் தேர்வு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.