புத்தகப்பையில் அரிவாள்:


நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்காண மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களின் புத்தகம் உள்ளிட்டவைகளை சோதனை செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். அப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகளை சோதனை செய்து உள்ளனர். அதில் ஒரு மாணவரின் புத்தகப்பையில் அரிவாள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிரச்சியடைந்த ஆசிரியர்கள் அதனை எடுத்துக்கொண்டு தலைமையாசிரியரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தலைமையாசிரியர் விசாரணை மேற்கொண்டதொடு தாழையூத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.


கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 3 மாணவர்கள்:


தகவலறிந்த காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அரிவாள் எடுத்து வந்த மாணவர் மற்றும் அவருடனான சக மாணவர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவர்களின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்தனர். பின் அவர்களுக்கு தகவலை தெரிவித்த காவல்துறையினர் பெற்றோருடன் மாணவர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் இரண்டு மாணவர்களுக்குள்ளும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், அதன் காரணமாக சக மாணவரை மிரட்டுவதற்கு புத்தக பையில் வைத்து அரிவாளை எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்களிடமும் புகாரை பெற்று மனு ஏற்பு ரசீதை பதிவு செய்தனர். தொடர்ந்து சிறார் நீதிமன்றத்தில் மூவரையும்  ஆஜர்படுத்தினர்.




கேள்விக்குறியாகும் எதிர்கால மாணவர் சமுதாயம்:


பின் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட சிறார் குழும நீதிபதி இருவரையும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க அறிவுரை வழங்கினார். அதன்படி மூவரும் கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். தன்னுடன் படிக்கும் சக மாணவனுடன் ஏற்படும் சிறு சிறு கருத்து மோதலை சுலபமாக எதிர்கொள்ளும் பக்குவம் இன்றி அதனை வன்முறை நோக்கில் கையாளுவது எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  இது போன்று மாணவர்கள் வன்முறையை கையில் எடுப்பது மிகுந்த வேதனையளிக்கும் விசயமாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். அதோடு மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வையும், ஒற்றுமையுணர்வையும் கூடுதலாக வழங்கும் பொறுப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 


ஆசிரியரை தீர்த்துக்கட்ட கத்தியுடன் வந்த  சம்பவம்:


ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் நாங்குநேரி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு சிலர் முறையாக பள்ளிக்கு வராமல் இருந்ததாகவும், சரிவர படிக்காமல் படிப்பில் கவனக்குறைவுடன் செயல்பட்டு வந்த நிலையிலும்,  ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபட்டு பள்ளியில் நடந்த தேர்விலும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்த நிலையில் அந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த மாணவர்கள் அந்த ஆசிரியரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்து தங்களது புத்தகப்பையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மூன்று மாணவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மூவரையும் நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.