பள்ளிப் பாடப்புத்தகத்தில் இருந்து பருவநிலை மாற்றம் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டதற்கு ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


சுருக்கப்பட்ட பாடங்கள்:


கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது முதலில் பள்ளிகளுக்கு தான் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் கடைசியாக தான் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமலேயே இருந்ததால், அவர்களின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்தது. பள்ளிகள் திறக்கப்பட்டபோதும் கூட மாணவர்களின் மீதான சுமையை குறைப்பதற்காக பாடங்களில் உள்ள பல்வேறு பகுதிகளை நீக்கி சுருக்கப்பட்ட பகுதிகளுக்கே பாடம் நடத்தப்பட்டதோடு, தேர்வுகளும் நடத்தப்பட்டது.


ஆசிரியர்கள் அமைப்பு அறிக்கை:


இந்நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலானது, பாட சுமையினை குறைக்க, பாடத்திட்டத்தினை சுருக்கும் போது மாணவர்களுக்கான அதில் இருந்து பருவநிலை மாற்றம் தொடர்பான பகுதிகளை நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து பருவநிலை மாற்றத்திற்கு எதிரான ஆசிரியர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “பருவநிலை மாற்றத்திற்கு எதிரான ஆசிரியர்களான நாங்கள், என்சிஇஆர்டி ( National Council of Educational Research and Training -NCERT) சமீபத்தில் பாடத்திட்டங்களில் செய்த மாற்றங்கள் குறித்து மிகவும் திகைத்துப் போயுள்ளோம். 11ம் வகுப்பு புவியியலில் இடம்பெற்றிருந்த பசுமை வீடுகள் விளைவு பாடம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் 7ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் இருந்து  காலநிலை, பருவநிலை, காலநிலை அமைப்புகள் மற்றும் நீர் ஆகிய முழு பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. அதோடு, இந்தியாவின் பருவநிலை தொடர்பான தகவல்கள் 9ம் வகுப்புப் பாடங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.




”காலநிலை பாடங்கள் முக்கியம்”:


மேலும், “இந்தியா முழுவதிலும் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற புதுப்பிக்கப்பட்ட தகவல்களின் சாராம்சத்தை அணுகக்கூடிய மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் விளக்குவது மிகவும் முக்கியம். காலநிலை மாற்றத்தின் யதார்த்தம், அதன் காரணங்கள் மற்றும் அதன் தீவிரம் பற்றிய முறையான அறிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை கணிக்கப்பட வேண்டும். பருவநிலை நெருக்கடியின் சிக்கலான தன்மையை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்திய ஆண்டுகளில், இந்த ஈடுபாடு பொதுவாக வகுப்பறையில் தொடங்கியது” என்று கூறியுள்ளது.




அடிப்படையில் கற்கவேண்டிய பாடங்கள்:


தற்போதைய சூழ்நிலைக்குத் தொடர்பில்லாதப் பாடங்கள் என்று என்சிஇஆர்டி நீக்கிய பருவநிலை மாற்ற அறிவியல், இந்திய பருவநிலைகள் மற்றும் நீக்கப்பட்ட மற்ற பிரச்சினைகள் தொடர்பான பாடங்கள் ஆகியவை மாணவர்கள் அடிப்படையில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள். அவற்றை நீக்கியிருப்பது திகைப்பளிக்கிறது என்று பருவநிலை மாற்றத்திற்கு எதிரான ஆசிரியர்கள் அமைப்பு கூறியுள்ளது.