அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நியமனத்துக்கு பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது. ஆசிரியர் நியமனத்துக்கான உரிய வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், அதுவரை பணி நியமனம் கூடாது என்று பள்ளிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களைத் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 1ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான ஊதியம் ரூ.7,500-ரூ.12,000 என்ற வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
8 மாதங்களுக்கு மட்டும் இவர்களைத் தற்காலிகமாக நியமிக்கலாம் எனவும் போட்டி ஏற்பட்டால், டெட் தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையில் பணியில் நியமிக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் பணி
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களைத் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் என்று அறிவிப்பு வெளியானது.
SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாயும், BT எனப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாயும், PG முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 12,000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. மாநிலம் முழுவதும் 4,989 இடைநிலை ஆசிரியர்களையும் 5,154 பட்டதாரி ஆசிரியர்களையும் 3,188 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
எழுந்த எதிர்ப்பலைகள்
எனினும் இதற்குக் கடுமையான எதிர்ப்பலைகள் எழுந்தன. ஆசிரியர் பணியில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை முழு நேரமாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நியமனத்துக்கு பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது. ஆசிரியர் நியமனத்துக்கான உரிய வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், அதுவரை பணி நியமனம் கூடாது என்று பள்ளிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
அரசுப் பள்ளிகளில் முறைகேடாகத் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்ததால், பணியிட நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இல்லம் தேடிக் கல்வி சிறப்பு பணி அலுவலர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி மேலாண்மை குழு வழியாக தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமைகள் எதனையும் பின்பற்றாமல் தங்களது விருப்பப்படி ஆசிரியர் நியமனம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன.
விரைவில் விரிவான வழிகாட்டல்
ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதி பெற்ற நபர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும்வரை தற்காலிக ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது.
இதுகுறித்த தெளிவுரைகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதற்குப் பிறகு உரிய முன்னுரிமைகளைப் பின்பற்றி தகுதியுள்ள அனைவருக்கும் வாய்ப்பளித்து, தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதனை அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.